Published : 12 Aug 2024 02:24 PM
Last Updated : 12 Aug 2024 02:24 PM

போதைப் பொருள் ஒழிப்பில் தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: அன்புமணி

அன்புமணி ராமதாஸ்

சென்னை; தமிழகத்தில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த வேண்டியது உடனடி தேவை ஆகும். அதை உணராமல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் மாணவர்களிடையே போதை மருந்து தடுப்பு உறுதிமொழி ஏற்றுக்கொள்வதை வெறும் சடங்காக செய்வதால் எந்த பயனும் இல்லை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “போதைப்பொருட்கள் நடமாட்டத்தை வேருடன் ஒழிப்போம் என்று கூறி, அதற்காக ‘போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ என்ற புதிய இயக்கத்தை திமுக அரசு தொடங்கி இரு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனால், போதைப் பொருட்கள் நடமாட்டம் குறைவதற்கு மாறாக அதிகரித்திருக்கிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், மூன்றாவது ஆண்டாக இன்றும் சென்னையில் மாணவர்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி செய்து வைத்ததுடன் தமது கடமையை முடித்துக் கொண்டார். போதைப்பொருட்களை ஒழிக்க உறுதியான நடவடிக்கை எடுக்காமல் கடமைக்காக தமிழக அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

திமுக அரசு பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகரித்து வருவதையும், அதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்பதையும் சுட்டிக்காட்டி, அதைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினேன். அதை ஏற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின், அதன் பிறகு தான் ‘போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ இயக்கத்தைத் தொடங்கினார். அதை குறை கூற முடியாது. ஆனால், அதன் பின் இரு ஆண்டுகள் ஆகியும் தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படவில்லை; முன்பு இருந்ததை விட இப்போது அதிகமாகியிருக்கிறது என்பது தான் வேதனையளிக்கும் உண்மை ஆகும்.

தமிழ்நாட்டில் கஞ்சா வணிகத்தை ஒடுக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறி வரும் அரசும், காவல்துறையும் அவ்வப்போது கஞ்சா 1.0, கஞ்சா 2.0, கஞ்சா 3.0, கஞ்சா 4.0 என்ற பெயரில் சோதனை நடத்துவதாகவும், ஒவ்வொரு முறையும் டன் கணக்கில் கஞ்சா பிடிபடுவதாகவும், பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்படுவதாகவும் பெருமைப்பட்டுக் கொள்கின்றன. ஆனால், அதனால் எந்த பயனும் இல்லை. பள்ளிக்கு அருகிலேயே , மாணவர்களுக்கு கஞ்சா விற்கப்படுவதும் தொடர்கிறது. இரு ஆண்டுகளாக பெயரளவிலாவது நடத்தப்பட்டு வந்த கஞ்சா வேட்டை கடந்த டிசம்பர் -ஜனவரி, மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படவில்லை.

2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் நாள் போதைப் பொருட்கள் ஒழிப்பு தொடர்பாக நடத்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கூட்டத்திலும், ஆகஸ்ட் 11-ஆம் நாள் நடைபெற்ற 30 லட்சம் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியிலும் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “எனது காவல் நிலைய எல்லையில் போதை மருந்து விற்பனையை முற்றிலுமாக தடை செய்துவிட்டேன் என்று ஒவ்வொரு காவல் நிலைய ஆய்வாளரும் உறுதி எடுத்துக்கொண்டாலே போதும், அதுவே முதல் வெற்றி. போதைப் பொருள் நடமாட்டத்தை தடுத்துவிட முடியும். பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், சமூகக் கூடங்கள் போன்ற இடங்களில் போதைப் பொருள் விற்பவர்களுக்கு அதிக தண்டனை வழங்கவேண்டும்” என்று ஆணையிட்டார்.

முதல்வரின் இந்த ஆணையை செயல்படுத்தியிருந்தாலே தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட அனைத்து போதைப்பொருள்கள் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்தியிருக்க முடியும். ஆனால், அதை தமிழக காவல்துறை செய்யவில்லை. ஏன் செய்யவில்லை என காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினும் கேட்கவில்லை. இந்த நடவடிக்கைகளில் நான் சர்வாதிகாரியைப் போலச் செயல்பட்டு குற்றம் நடைபெறாமல் தடுப்பேன் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். ஆனால், அவரே அதை மறந்து விட்டார்.

போதைப்பொருள்களை தடுப்பதற்கான சட்டங்களை கடுமையாக்குவதற்கு அரசு முடிவெடுத்துள்ளது. சட்டங்களைத் திருத்த இருக்கிறோம்; சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க இருக்கிறோம்; போதை மருந்து விற்பவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படவுள்ளன; போதைப் பொருள் தடுப்பு பிரிவிற்கு தனி உளவுப்பிரிவு ஏற்படுத்தப்பட இருக்கிறது என்றெல்லாம் முதலமைச்சர் அறிவித்திருந்தார். ஆனால், ஒரு சிலரின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டதைத் தவிர வேறு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

தமிழ்நாட்டில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த வேண்டியது உடனடித் தேவை ஆகும். அதை உணராமல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தில் மாணவர்களிடையே போதை மருந்து தடுப்பு உறுதிமொழி ஏற்றுக்கொள்வதை வெறும் சடங்காக செய்வதால் எந்த பயனும் இல்லை. எனவே, இனியாவது தமிழக அரசு விழித்துக் கொண்டு தமிழ்நாட்டில் போதைப்பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x