Last Updated : 12 Aug, 2024 01:35 PM

 

Published : 12 Aug 2024 01:35 PM
Last Updated : 12 Aug 2024 01:35 PM

ஜெயலலிதா குறித்து விமர்சனம்: தமிழக அமைச்சரின் உருவப்படத்தை கிழித்து புதுவையில் அதிமுகவினர் சாலை மறியல்

புதுச்சேரி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக விமர்சனம் செய்ததைக் கண்டிக்கும் விதமாக புதுச்சேரி அதிமுகவினர் இன்று (திங்கள்கிழமை) தமிழக அமைச்சர் தா.மோ.அன்பரசனின் உருவப்படத்தை கிழித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சனம் செய்த தமிழக அமைச்சர் தா.மோ.அன்பரசனை கண்டித்து புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் அண்ணா சிலை அருகே கண்டன மறியல் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். போராட்டத்தின் போது தமிழக அமைச்சர் தா.மோ.அன்பரசனின் படத்தை கிழித்து எறிந்தும், அவரை பதவி நீக்கம் செய்ய வலியுறித்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினர். இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் திடீரென சாலை மறியலிலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து புதுவை அதிமுக மாநில செயலர் அன்பழகன் கூறியதாவது: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தொண்டர்கள் மனம் நோகும் அளவில் கேலி செய்து அவதூறாக திமுக அமைச்சர் அன்பரசன் பேசியது கண்டிக்கத்தக்கது. அரசியல் கட்சியை தற்போது துவங்கியுள்ள நடிகர் விஜய் பற்றி விமர்சனம் செய்வதாக இருந்தால் நேரடியாக அவரை பற்றி பேசுவது நல்ல அரசியல்வாதிக்கு அழகு.

அதை விட்டுவிட்டு ஜெயலலிதாவை பற்றி பேசுவது சரியானதல்ல. திரைப்பட நடிகர்களை தரம் தாழ்ந்து தற்போது பேசும் திமுகவினர் மக்களவைத் தேர்தலில் நடிகர் கமல்ஹாசனை தங்கள் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தியது ஏன்? மறைந்த தலைவர்களை பற்றி அநாகரிமாக பேசிய அன்பரசனை, அமைச்சர் பதவியிலிருந்து தமிழக முதல்வர் நீக்க வேண்டும். அவரது பேச்சுக்கு முதல்வர் மன்னிப்பு கோர வேண்டும்” என்று அன்பழகன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x