Last Updated : 12 Aug, 2024 01:33 PM

1  

Published : 12 Aug 2024 01:33 PM
Last Updated : 12 Aug 2024 01:33 PM

சாதுவான யானைகள் மனிதர்களை துரத்துவதும், கொல்வதும் ஏன்?  - சர்வதேச யானைகள் தின விழாவில் விளக்கம் 

ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உலக யானைகள் தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி.

ஆண்டிபட்டி: யானைகள் யாருக்கும் தீங்கு ஏற்படுத்தாத உயிரினம் ஆகும். இருப்பினும் மனிதர்கள் நடந்து கொள்ளும் விதத்தைப் பொறுத்தே யானைகளின் செயல்பாடுகளும், எதிர்வினைகளும் அமைந்து விடுகின்றன என்று சர்வதேச யானைகள் தின விழாவில் விளக்கப்பட்டது.

ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச யானைகள் தினவிழா இன்று (ஆக.12) கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு மாவட்ட வன அலுவலர் சமர்த்தா தலைமை வகிக்க, வனச்சரக அலுவலர் அருண்குமார், தலைமை ஆசிரியர் ரங்கராஜ் சமூக ஆர்வலர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் வனத்துறையினர் பேசுகையில், “யானைகள் பொதுவாக ஆப்பிரிக்கா, ஆசிய இனத்தைச் சேர்ந்தவைகளாகவே உள்ளன. யானை யாருக்கும் தீங்கு ஏற்படுத்தாத உயிரினம் ஆகும்.

இருப்பினும் மனிதர்கள் நடந்து கொள்ளும் விதம், மனிதர்களால் முன்பு ஏற்பட்ட அனுபவம் ஆகியவற்றால் அவை எதிர்வினை ஆற்றுகின்றன. இதனால்தான் சில இடங்களில் யானைகள், மனிதர்களை துரத்துவதும், கொல்வதுமான சம்வபவங்கள் தொடர்கின்றன. அதேபோல் யானைகளின் வழித்தடம் மறிக்கப்படுவதாலேயே அவை திசை மாறி ஊருக்குள் வரும் நிலை ஏற்படுகிறது. யானை ஒரு நாளைக்கு 250 கிலோ வரை உணவு எடுத்துக் கொள்ளும். 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும். இதை அவற்றால் ஒரே இடத்தில் பெற முடியாது என்பதால் தினமும் யானைகள் 40 முதல் 50 கி.மீ. வரை பயணிக்கின்றன.

யானைகள் கூட்டமாகவே வாழும் தன்மை கொண்டவை. பெரும்பாலும் யானைக் கூட்டத்தை பெண் யானைதான் வழிநடத்தும். யானைகளால் காடும், இயற்கையும் வளம் பெறும். அதனால்தான் 2010-ம் ஆண்டு மத்திய அரசு யானையை தேசிய பாரம்பரிய விலங்காக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து யானகளின் பாதுகாப்புக்கு பல்வேறு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அதனால் கடந்த சில ஆண்டுகளாக யானைகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது” என்றனர்.

தொடர்ந்து, யானைகளைப் பாதுகாப்பதின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் மாணவர்கள் யானை போன்ற முகமூடி அணிந்து பங்கேற்றனர். பின்பு, யானைகள் குறித்து விநாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x