Last Updated : 12 Aug, 2024 12:22 PM

 

Published : 12 Aug 2024 12:22 PM
Last Updated : 12 Aug 2024 12:22 PM

பழநியில் முத்தமிழ் முருகன் மாநாடு ஏற்பாடுகள் தீவிரம்: அமைச்சர்கள் சேகர்பாபு, சக்கரபாணி நேரில் ஆய்வு

படங்கள்: நா.தங்கரத்தினம் 

பழநி: பழநியில் நடைபெற உள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் திங்கட்கிழமை (ஆக.12) காலை ஆய்வு மேற்கொண்டனர்.

உலகம் முழுவதும் திருமுருக வழிபாடு தனித்துவம் பெற்ற வழிபாடாக சிறந்து விளங்குகிறது. முருகனைப் பற்றிய கதைகள், கட்டுகள் நாட்டில் உலவுகின்றன. முதன் முதலில் முருகனின் மேன்மை கண்ட பழந்தமிழர், இளமையும் அழகும் உடைய செம்பொருளாகக் கொண்டு வழிபட்ட மாண்பை ஆய்வு நோக்கில் நிறுவ, முருக பக்தர்களை உலகளவில் ஒருங்கிணைத்து ஆக.24 மற்றும் 25-ம் தேதிகளில் பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் உள்ள சமய பெரியோர், ஆன்மிக அன்பர்கள், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். விழா ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் 20 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவும், இக்குழுவின் முடிவுகளை செயல்படுத்துவதற்காக 11 செயல்பாட்டுக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மாநாடு நடைபெற உள்ள பழனியாண்டவர் கல்லூரியில் 2,000 பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல், 200 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் விஆர் (விர்ச்சுவல் ரியாலிட்டி) மற்றும் 3டி திரையரங்கம், அறுபடை முருகன் சம்பந்தப்பட்ட கண்காட்சி அரங்கம், வாகன நிறுத்தும் இடம், 6 இடங்களில் நுழைவு வாயில், அன்னதான கூடம், பிரசாதம் வழங்கும் இடம் மற்றும் ஸ்டால்கள் அமைக்கும் பணிகள் 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மூலம் இரவு, பகலாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இன்று (திங்கட்கிழமை) காலை மாநாட்டு பந்தல் அமைக்கும் பணி, பங்கேற்பாளர்கள், பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, மாவட்ட ஆட்சியர் மொ.நா.பூங்கொடி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும், மாநாட்டு பணிகள் குறித்தும், அனைத்துத்துறை அலுவர்களும் ஒருங்கிணைத்து பணிகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் அறிவுறுத்தினர். பின்னர், கல்லூரி வளாகத்தில் அனைத்துத்துறை அலுவர்களுடன் மாநாடு தொடர்பாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆலோசனை நடத்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x