Published : 12 Aug 2024 06:52 AM
Last Updated : 12 Aug 2024 06:52 AM

தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பில் 1.5 கி.மீ மட்டுமே பாக்கி: 15 ஆண்டுகளாக ‘நடக்கும்’ திட்டத்தில் வெள்ள நீர் ஓடுமா?

சென்னை: திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் வறண்ட பகுதிகளை வளமாக்கும் தாமிரபரணி - நம்பியாறு - கருமேனியாறு இணைப்பு திட்டத்துக்கான 75 கி.மீ. நீள கால்வாயில் 1.5 கி.மீ.மட்டுமே எஞ்சியுள்ளது. இத்திட்டத்தை விரைவாக முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள வறண்ட பகுதிகளை வளமாக்கும் வகையில் ரூ.369 கோடியில் தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த கடந்த 2008-ம் ஆண்டு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, தாமிரபரணி ஆற்றில் இருந்து கடலில் உபரியாக கலக்கும் 13,758 மில்லியன் கனஅடி வெள்ளநீரில், கன்னடியன் (தாமிரபரணியின் 3-வது) அணைக்கட்டில் இருந்து 2,765 மில்லியன் கனஅடி நீரை கருமேனியாறு, நம்பியாறு நதிகளுடன் இணைக்கும் திட்டத்தை கடந்த 2009 பிப்ரவரி 21-ம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதி தொடங்கிவைத்தார்.

இந்நிலையில், இத்திட்டத்துக்கான திருத்திய மதிப்பீடு ரூ.1,060.76 கோடிக்கு கடந்த மார்ச் 2-ம் தேதி நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டது. மத்திய அரசின் ஜல்சக்தி அமைச்சகம் ரூ.872.45 கோடிக்கு முதலீட்டு அனுமதி வழங்கியுள்ளது. இத்திட்டத்துக்காக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மொத்தம் 2,645.40 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டும். இப்பணி 98 சதவீதம் முடிந்துள்ளது. எஞ்சிய நிலங்களை கையகப்படுத்தும் பணி தாமதமாவதால் திட்டத்தை நிறைவேற்றுவதிலும் தாமதம் ஏற்படுகிறது.

இதுகுறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது: மொத்தம் 4 நிலைகளாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதில், 3 நிலைகளில் 100 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. 4-வது நிலையில் 95 சதவீத பணிகள் முடிந்துள்ளன. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம், வெள்ளாங்குழி கிராமம் அருகே கன்னடியன் கால்வாயில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் எம்.எல்.தேரிவரை, விநாடிக்கு 3,200 கனஅடி வீதம் வெள்ளநீரை கொண்டு செல்லும் வகையில் 75.2 கி.மீ.நீளத்துக்கு வெள்ளநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது. இதில், எம்.எல்.தேரி குளம் அருகே சுமார் 1.5 கி.மீ. தூரத்துக்கு நிலத்தை கையகப்படுத்தி கால்வாய் வெட்டும் பணியில் தாமதம் ஏற்படுகிறது. இந்த இடம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதே இதற்கு காரணம்.

கன்னடியன் கால்வாயின் பெரும்பகுதி பணிகள் முடிந்துவிட்டதால், கடந்த ஆண்டு டிசம்பரில் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது டிச.17, 18-ம் தேதிகளில் கன்னடியன் வெள்ளநீர் கால்வாயில் தண்ணீரை திருப்பிவிட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது. சுமார் 2வாரங்கள் நடைபெற்ற இந்த சோதனை ஓட்டத்தின்போது, கால்வாயில் 42 இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. திசையன்விளை வரை கால்வாயில் தண்ணீர் சென்றதால் அந்த பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததுடன், கிணறுகளிலும் நீர்மட்டம் உயர்ந்தது. உடைப்பு ஏற்பட்ட இடங்களை சரிசெய்து மீண்டும் சோதனை ஓட்டம் நடத்தினோம். கடந்த ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சேதமடைந்த குளங்களை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இப்பணிகள் முடிவடைந்ததும் கன்னடியன் கால்வாய் வழியாக வெள்ளநீரை குளங்களுக்கு கொண்டு செல்லும் பணி சோதனை அடிப்படையில் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கிடையே, சோதனை ஓட்டத்தின்போது, அப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இத்திட்டத்தை முழுமையாக முடிக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x