Last Updated : 01 May, 2018 03:17 PM

 

Published : 01 May 2018 03:17 PM
Last Updated : 01 May 2018 03:17 PM

புதுச்சேரியில் தாழ்த்தப்பட்ட பெண் கோயிலுக்குள் நுழையத் தடையா?- பரவும் வீடியோ காட்சிகள்: மறுக்கும் அறங்காவலர் குழு

புதுச்சேரியில் தாழ்த்தப்பட்ட பெண் கோயிலுக்குள் நுழையத் தடை விதித்ததாக வீடியோ காட்சிகள் வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது. இத்தகவல் உண்மை என பாதிக்கப்பட்ட பெண் தரப்பினர் குறிப்பிடுகின்றனர். ஆனால், இதை அறங்காவலர் குழுவினர் மறுக்கின்றனர். இதுதொடர்பாக விரைவில் போலீஸில் புகார் தர உள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் குறிப்பிடுகின்றனர்.

புதுச்சேரி கூனிச்சம்பட்டு கிராமத்தில் உள்ள திரௌபதியம்மன் கோயில் திருவிழா கடந்த 20 நாட்களாக நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று சிறப்புடன் நடந்தது.

முன்னதாக திருக்கல்யாண வைபவம் நேற்று முன்தினம் நடந்தது. இதனைக் காண கூனிச்சம்பட்டை சேர்ந்த தாழ்த்தப்பட்ட பெண்கள் வந்துள்ளனர். அவர்களை கோயிலுக்குள் அறங்காவலர் குழுவினர் செல்ல அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ராதா என்ற இளம்பெண் அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இக்காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவியது.

இது தொடர்பாக ராதாவிடம் கேட்டதற்கு, "கோயிலில் முதலில் சாமி கும்பிடக் கூடாது என்று தடுத்தனர். இதர சமூகத்தினருக்கு பிறகு சாமி கும்பிடச் சொல்வதை எதிர்த்தேன். அதனால் வாக்குவாதம் ஏற்பட்டது" என்று குறிப்பிட்டார்.

கூனிச்சம்பட்டைச் சேர்ந்த சமூக ஆர்வலர் காத்தவராயன் கூறுகையில், "தொடர்ந்து தலித் சமூகத்தினர் ஒதுக்கப்படுவது எங்கள் கிராமத்தில் தொடர்கிறது. தற்போது இப்பெண் மூலம் தீர்வு ஏற்படும் என நம்புகிறோம்" என்று குறிப்பிட்டார்.

இப்புகார்கள் தொடர்பாக கோயில் அறங்காவலர் குழுவிடம் கேட்டதற்கு மறுத்தனர். கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர் முத்துலிங்கம் கூறுகையில், "கோயிலில் திருக்கல்யாணம் நடத்தும் உபயதாரர்கள் முதலில் வழிபாடு செய்த பிறகே மற்றவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அப்படிதான் இம்முறையும் நடந்தது. அதை மீறி அப்பெண் வந்ததால் பிரச்சினை ஏற்பட்டது" என்று குறிப்பிட்டார்.

இதனிடையே இப்பிரச்னை குறித்து தலித் சமூகத்தினர் திருக்கனூர் காவல் நிலையத்தில் புகார் செய்யவும் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x