Published : 11 Aug 2024 03:15 PM
Last Updated : 11 Aug 2024 03:15 PM
சென்னை: ‘அறியப்படாத தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள்' என்ற தலைப்பிலான ஓவிய கண்காட்சியை சென்னை வியாசர்பாடி விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று (ஆக.11) தொடங்கி வைத்தார்.
இந்தியாவின் 78வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஜெய்சுயா அறிவுசார் கல்வியகம் மற்றும் தென்னிந்திய ஆய்வு மையம் சார்பில் 'அறியப்படாத தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள்' என்ற தலைப்பில் ஓவிய பயிற்சி, பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் பங்கேற்று மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் இடம்பெற்ற கண்காட்சி சென்னை வியாசர்பாடியில் உள்ள விவேகானந்தா பள்ளியில் நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று கண்காட்சியை திறந்து வைத்து, அதில் இடம்பெற்றுள்ள சுதந்திர போராட்ட வீரர்களின் ஓவியங்களை பார்வையிட்டார்.
இதுகுறித்து ஜெய்சுயா அறிவுசார் கல்வியகத்தின் நிறுவனர் ஜே.வைத்தியநாதன் கூறும்போது, "நாங்கள் இந்த கல்வியகத்தை கடந்த 16 ஆண்டுகளாக நடத்தி வருகிறோம். இதில் 3 வயது முதல் மாணவர்களுக்கு ஓவியப் பயிற்சி, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறோம்.
நாட்டின் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ''அறியப்படாத தமிழக சுதந்திர போராட்ட வீரர்கள்' என்ற தலைப்பில் ஓவிய பயிற்சி வழங்கினோம். இதில் 10 வயதுக்கு மேற்பட்ட ஏராளமான மாணவர்கள் பங்கேற்று சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஓவியங்களை வரைந்தனர். அவ்வாறு வரையப்பட்ட 78 சுதந்திர வீரர்களின் ஓவியங்கள் இந்த கண்காட்சியில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. இந்த கண்காட்சி இப்பள்ளியில் நாளை வரை நடைபெறும்'' என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் ஜெய்சுயா அறிவுசார் கல்வியக முதல்வர் வி.உதயமதி, பள்ளி தாளாளர் எஸ்.ராமச்சந்திரன், முதல்வர் எம். லதா, தென்னிந்திய ஆய்வு மையத்தின் சென்னை பொறுப்பாளர் குமரேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT