Published : 11 Aug 2024 02:00 PM
Last Updated : 11 Aug 2024 02:00 PM

ஆக. 12 முதல் 15 வரை மாவட்ட தலைநகரங்களில் தேசிய கொடி அணிவகுப்பு - காங். தலைவர் வலியுறுத்தல்

செல்வப்பெருந்தகை

சென்னை: சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தேசியக் கொடி பொருத்தப்பட்ட நூற்றுக்கணக்கான இருசக்கர வாகன அணிவகுப்பை முக்கிய வீதிகளில் நடத்த வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “1885 இல் இந்திய விடுதலைக்காக தொடங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் 1920இல் மகாத்மா காந்தி அவர்களின் தலைமையை ஏற்று ஒட்டுமொத்த இந்திய மக்களின் இயக்கமாக மாறி அகிம்சை, சத்தியாகிரகம் ஆகிய கொள்கைகளை கடைபிடித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி பலமுறை சிறை புகுந்து, இறுதியில் 1942 இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் மூலம் 1947 ஆகஸ்ட் 15 இல் இந்தியா விடுதலை பெற்றது.

சுதந்திர இந்தியாவில் கடந்த 77 ஆண்டுகளாக டெல்லி செங்கோட்டையில் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, தொடர்ந்து 16 ஆண்டுகளும், அதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் பிரதமர்கள் 24 ஆண்டுகள் என மொத்தம் 54 ஆண்டுகள் தேசிய கொடியை ஏற்றி வரலாற்று சிறப்புமிக்க உரையை நிகழ்த்தியிருக்கிறார்கள், இந்தியாவின் வளர்ச்சிக்கு அர்பணித்திருக்கிறார்கள்.

இந்திய தேசிய காங்கிரசுக்கும், தேசிய கொடிக்கும் உள்ள உறவை பாஜக உள்ளிட்ட எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை ஏற்றி கொண்டாடுவதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்பேரில் வழக்கத்திற்கு மாறாக மாநிலங்களில் தேசிய கொடி அணிவகுப்பு நடத்தி சொந்தம் கொண்டாட முற்படுவதற்கு பாஜகவுக்கு எந்த உரிமையும் இல்லை.

இன்றைய பாஜகவின் தாய் ஸ்தாபனமான ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கை வகுப்பாளர் எம்.எஸ். கோல்வால்கர் எழுதிய சிந்தனை தொகுப்பில் மூவர்ணம் கொண்ட தேசிய கொடியை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று பகிரங்கமாக அறிவித்தார். ஆனால் விடுதலை போராட்ட எழுச்சியை பார்த்த ஆர்.எஸ்.எஸ். முதல் முறையாக நாகபுரியில் உள்ள தலைமை அலுவலகத்தில் முதல் சுதந்திர தினமான 15 ஆகஸ்ட் 1947 மற்றும் முதல் குடியரசு தினமான 26 ஜனவரி 1950 இல் ஏற்றியதற்கு பிறகு 52 ஆண்டுகள் கழித்து 26 ஜனவரி 2001 இல் தான் தேசிய கொடியை ஏற்றினார்கள் .

இடைப்பட்ட 52 ஆண்டுகாலம் தேசிய கொடியை ஏற்றாமல் புறக்கணித்து அவமதித்த தாய் ஸ்தாபனமான ஆர்.எஸ்.எஸ். வழி வந்த இன்றைய பாஜக, தேசிய கொடியை சொந்தம் கொண்டாடி அபகரிக்க முயல்வதை தேசபக்தியுள்ள எவரும் அனுமதிக்க மாட்டார்கள். தேசியக் கொடிக்கு சொந்தம் கொண்டாட முற்படும் பாஜகவின் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டியது விடுதலைக்கு போராடி நவ இந்தியாவை உருவாக்கிய இந்திய தேசிய காங்கிரஸுக்கு உண்டு.

எனவே, வருகிற 78 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தேசியக் கொடி பொருத்தப்பட்ட நூற்றுக்கணக்கான இருசக்கிர வாகன அணிவகுப்பை முக்கிய வீதிகளில் நடத்த வேண்டும்.

இதை தவிர வட்டார / சர்க்கிள், நகர, பேரூர், கிராமங்களில் தேசியக் கொடியை தாங்கி பாதயாத்திரை நடத்தி விடுதலை போராட்ட வரலாற்றையும், தேச தந்தை காந்தியடிகளின் பங்களிப்பையும் விளக்குகின்ற வகையில் கூட்டங்களை நடத்த வேண்டும். இதன்மூலம் தேசியக் கொடியோடு இந்திய தேசிய காங்கிரஸுக்கு இருக்கிற உரிமையையும், கொடியின் பெருமையை காக்க திருப்பூர் குமரன் போன்றவர்கள் செய்த தியாகத்தையும் மக்களிடையே பறைசாற்றி நினைவு கூறுகிற வகையில் சுதந்திர தின விழா சீரும், சிறப்புமாக நடத்திட அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x