Published : 11 Aug 2024 09:04 AM
Last Updated : 11 Aug 2024 09:04 AM
சென்னை: பட்டியல் சமூக மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டு அளவை உயர்த்த வலியுறுத்தி ஆக.13-ல் விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எஸ்.சி, எஸ்.டி மக்களின் தற்போதைய மக்கள் தொகை எவ்வளவு என்பதைத் தெரிந்து கொள்ள முடியாத படி மக்கள் தொகைக் கணக்கெடுப்பையே எடுக்காமல் மத்திய பாஜக அரசு ஏமாற்றி வருகிறது. இதற்கிடையே, சட்ட மேதை அம்பேத்கரின் நோக்கத்துக்கு மாறாக மாநில அரசுகளே எஸ்.சி பட்டியலை பல்வேறு குழுவினராகப் பிரித்து இடஒதுக்கீட்டையும் பங்கிட்டுத் தரலாம் எனவும், வருமான வரம்பை அளவு கோலாகக் கொண்ட 'கிரீமிலேயர்' என்னும் பொருளாதாரத்தில் சற்று மேம்பட்ட பிரிவினரை இடஒதுக்கீட்டிலிருந்து அகற்ற வேண்டும் எனவும் அண்மையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதன் மூலம் நாடாளுமன்றத்தைப் பயன்படுத்துவதற்கு பதிலாக உச்ச நீதிமன்றத்தைப் பயன்படுத்தி எஸ்.சி, எஸ்.டி மக்களின் இட ஒதுக்கீட்டைப் பறிப்பதற்கு பாஜக தயாராகிவிட்டது என்பது தெளிவாகிறது. பட்டியல் சமூகத்தினரைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து இடஒதுக்கீட்டைப் பங்கீடு செய்வதற்கு மாநில அரசுகளிடம் அதிகாரம் அளிக்கக் கூடாது. வருமான வரம்பு அடிப்படையில் இடஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்துவதற்கு கிரீமிலேயர் முறையைத் திணிக்க முயலக் கூடாது.
உச்சநீதிமன்றத்தில் சீராய்வு செய்வதற்கு மத்திய அரசு மனு தாக்கல் செய்ய வேண்டும். கிரீமிலேயர் குறித்து நீதிபதிகள் சொன்ன கருத்துகளை அந்த தீர்ப்பிலிருந்து நீக்குவதற்கு மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். பட்டியல் சமூகத்தினரின் இடஒதுக்கீட்டு அளவை அவர்களது மக்கள் தொகைக்கேற்ப உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விசிக சார்பில் வரும் 13-ம் தேதிசென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT