Published : 11 Aug 2024 08:16 AM
Last Updated : 11 Aug 2024 08:16 AM

ஃபார்முலா-4 கார் பந்தயத்துக்கு தடை கோரி மனு: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் அதிமுக கடிதம்

புதுடெல்லி: சென்னையில் நடைபெறும் ஃபார்முலா-4 கார் பந்தயத்துக்கு தடை கோரி அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை தீவுத்திடலை சுற்றியுள்ள சாலை மார்க்கமாக கடந்தாண்டு டிச. 9 மற்றும் டிச.10 ஆகிய தேதிகளில் ஃபார்முலா-4 கார் பந்தயம் நடத்த திட்டமிடப்பட்டது.

தனியார் நிறுவனம் சார்பில் நடத்தப்படவுள்ள இந்த கார் பந்தயத்துக்காக தமிழக அரசு ரூ.42 கோடி வரை செலவிட்டு இருப்பதாகவும், அரசு மருத்துவமனைகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னை மாநகருக்குள் பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் இடையூறாக இந்த அதிவேக கார் பந்தயத்தை நடத்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் வழக்கறிஞரணி முன்னாள் நிர்வாகியான பாலுச்சாமி உள்ளிட்ட பலர் வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர்.

இந்நிலையில் கடந்தாண்டு டிசம்பரில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், மழை வெள்ள பாதிப்பு காரணமாக இந்த கார் பந்தயம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின்போது விரைவில் இந்த கார் பந்தயம் திட்டமிட்டபடி அதே இடத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் நடத்தப்படும், என தெரிவிக்கப்பட்டது.

அதையேற்ற நீதிமன்றம், தமிழக அரசு இந்த கார் பந்தயத்துக்காக செலவிட்ட ரூ. 42 கோடியை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திடமிருந்து திருப்பி வசூலிக்க வேண்டும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற பந்தயங்கள் நடத்துவதாக இருந்தால் பொதுமக்கள் மற்றும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அத்துடன் இந்த பந்தயத்தை நடத்தும் நிறுவனம் ரூ. 15 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் ஃபார்முலா-4 கார் பந்தயத்தை நடத்திக்கொள்ள அனுமதி வழங்கியிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் வரும் ஆக.31 மற்றும் செப்.1 ஆகிய தேதிகளில் இந்த கார் பந்தயத்தை சென்னையில் நடத்துவதற்கான சாலை உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து இந்த கார் பந்தயத்துக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் அதிமுக வழக்கறிஞர் அணி முன்னாள் நிர்வாகியான பாலுச்சாமி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசரவழக்காக விசாரிக்க வேண்டுமெனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x