Published : 10 Aug 2024 07:13 PM
Last Updated : 10 Aug 2024 07:13 PM

‘ஒரு எஃப்ஐஆர் கூட முறையாக பதிய தெரியாதா?’ - எஸ்.ஐ மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் வாய்மொழி உத்தரவுப்படி எப்ஐஆர் பதிவு செய்துள்ளதாக தெரிவித்த திரு.வி.க.நகர் காவல் உதவி ஆய்வாளர் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க தமிழக டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பெரவள்ளூர் பேப்பர் மில் சாலையில் ராஜா பாதர் என்பவருக்கு சொந்தமான கடையை பெரம்பூரைச் சேர்ந்த முகமது அபுதாஹிர் கடந்த பல ஆண்டுகளாக வாடகைக்கு எடுத்து கண் கண்ணாடி வியாபாரம் செய்து வருகிறார். இந்தக் கடைக்கு மாத வாடகையாக ரூ.10 ஆயிரம் செலுத்தி வந்த நிலையில் தற்போது அட்வான்ஸ் தொகையாக ரூ.2 லட்சமும், மாத வாடகையாக ரூ.20 ஆயிரமும் தரக் கோரி கடை உரிமையாளர் அந்தக்கடைக்கு கடந்த ஜூன் மாதம் பூட்டு போட்டுள்ளார். எனவே, தொழில் செய்ய முடியாத நிலையில் முகமது அபுதாஹிர் போலீஸில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், பூட்டை திறந்து கடையை நடத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி முகமது அபுதாஹிர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீஸாருக்கு வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக திரு.வி.க.நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கடந்த ஜூலை 12-ம் தேதி பதிவு செய்துள்ள எஃப்ஐஆரில் உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் பிறப்பித்த வாய்மொழி உத்தரவுப்படி இந்த முதல் தகவல் அறிக்கையை (எப்ஃஐஆர்) பதிவு செய்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், முகமது அபுதாஹிர் தொடர்ந்திருந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது. எஃப்ஐஆரைப் படித்துப் பார்த்த நீதிபதி, அதில் தனது பெயரைக் குறிப்பிட்டு எப்ஐஆர் பதிவு செய்ததற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளருக்கு ஒரு எப்ஐஆர் கூட முறையாக பதிவு செய்யத் தெரியாதா? என கேள்வி எழுப்பிய நீதிபதி, அந்த எப்ஐஆர் தனது வாய்மொழி உத்தரவுப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளதால் தானும் சாட்சியம் அளிக்க வேண்டுமா? என கோபத்துடன் கேள்வி எழுப்பினார்.

அப்போது காவல் துறை தரப்பில், நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கோரப்பட்டது. ஆனால் அதையேற்க மறுத்த நீதிபதி, அந்த முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்த திரு.வி.க.நகர் உதவி ஆய்வாளரான நேரு மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் நடவடிக்கை எடுக்கப்பட்டது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை வரும் ஆக.16-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x