Published : 10 Aug 2024 06:00 PM
Last Updated : 10 Aug 2024 06:00 PM

தமிழக போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பணப் பலன்களை வழங்க ரூ.38 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு

கோப்புப் படம்

சென்னை: தமிழகத்தில் போக்குவரத்து ஓய்வூதியர்களுக்குப் பணப்பலன்களை வழங்க ரூ.38 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாகப் போக்குவரத்துத் துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி இன்று பிறப்பித்துள்ள அரசாணை விவரம்: தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் முதல் நடப்பாண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நடப்பாண்டு மார்ச் மாதம் வரை உயிரிழந்த தொழிலாளர்களுக்கும் ஓய்வுக் கால பணப்பலன்கள் வழங்கப்பட வேண்டியுள்ளது.

பணப்பலனில் ஒரு பகுதியை (50 சதவீத பிஎஃப்) வழங்க ரூ.38.73 கோடி தேவைப்படுகிறது. இதில் மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.9.6 கோடி, விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.1.1 கோடி, விழுப்புரம், சேலம், கோவை, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி போக்குவரத்துக் கழகங்களுக்கு முறையே ரூ.5.8 கோடி, ரூ.3.6 கோடி, ரூ.4.3 கோடி, ரூ.8 கோடி, ரூ.3.2 கோடி, ரூ.2.9 கோடி வழங்க வேண்டும். இதற்காக அரசு நிதி வழங்க வேண்டும் என போக்குவரத்துத் துறை தலைவர் அலுவலகத்திலிருந்து கடிதம் பெறப்பட்டது. இதை கவனமாகப் பரிசீலித்த அரசு, ரூ.38 கோடியே 73 லட்சத்து 65 ஆயிரம் ஒதுக்கி ஆணையிடுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x