Published : 10 Aug 2024 02:15 PM
Last Updated : 10 Aug 2024 02:15 PM

“தமிழகத்தில் காலியாக உள்ள 5 பல்கலை., துணைவேந்தர் பணியிடங்களை உடனே நிரப்புக” - ராமதாஸ்

ராமதாஸ்

சென்னை: தமிழகத்தில் 5 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடம் காலியாக இருக்கும் நிலையில், உடனே அதை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் இன்றுடன் ஓய்வு பெறுவதையடுத்து, தமிழ்நாட்டில் காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. இவை தவிர மேலும் இரு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், புதிய துணைவேந்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படாதது கண்டிக்கத்தக்கது ஆகும்.

தமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகிய 4 பல்கலைக்கழகங்களுக்கும் புதிய துணைவேந்தர்கள் நியமிக்கப்படாததால் அவற்றின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன. இவற்றில் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி 2022 அக்டோபர் மாதம் முதலும், கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி 2022 நவம்பர் மாதம் முதலும் சுமார் இரு ஆண்டுகளாக காலியாக உள்ளன. இப்போது இந்தப் பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகமும் இணைந்துள்ளது.

துணைவேந்தர்கள் இல்லாததால் இந்த பல்கலைக்கழகங்களில் கல்வி வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது. தமிழகத்தின் பிற பல்கலைக்கழகங்களை விட அண்ணா பல்கலைக் கழகம் மிகப்பெரியது. அதிக பொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்கக் கூடியது. அத்தகைய பல்கலைக் கழகம் தலைமை இல்லாமல் இருந்தால் அதன் செயல்பாடுகள் அடியோடு முடங்கி விடும் ஆபத்து உள்ளது.

இவை தவிர புதிய துணைவேந்தர்கள் நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு இல்லாததால் சேலம் பெரியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர்கள் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. நெல்லை மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர்கள் பதவிக்காலம் அடுத்த ஓராண்டுக்குள் நிறைவடையவிருக்கிறது.

புதிய துணைவேந்தர்களை நியமிப்பதற்கான பணிகள் உடனடியாக தொடங்கப்படவில்லை என்றால் அடுத்த ஆண்டிற்குள் பத்துக்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்கள் துணைவேந்தர் இன்றி தடுமாறும் நிலை உருவாகும். உயர்கல்வி வளர்ச்சிக்கு இது நல்லதல்ல.

பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழுவில் யு.ஜி.சி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதியை சேர்க்க வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்து அரசுக்கும், ஆளுநருக்கும் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாகவே துணைவேந்தர்களை நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எந்த பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தர் நியமிக்கப்பட வேண்டுமோ, அந்த பல்கலைக்கழகத்தின் விதிகள் மதிக்கப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள எந்த பல்கலைக்கழகத்தின் விதிகளிலும், பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக்குழுவில் பல்கலைக்கழக மானியக் குழுவின் பிரதிநிதியை சேர்க்க வேண்டும் என்ற பிரிவு இல்லாததால் இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலை தான் சரியானது. அதுமட்டுமின்றி, வேந்தர் என்ற முறையில் தேடல் குழுவால் பரிந்துரைக்கப்படும் 3 பேர் கொண்ட பட்டியலில் இருந்து ஒருவரை துணைவேந்தராக தேர்ந்தெடுக்கும் அதிகாரம் மட்டும் தான் ஆளுநருக்கு வழங்கப்பட்டிருக்கிறதே தவிர, தேடல் குழுவை அமைப்பதற்கான அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப் படவில்லை. மாறாக, தேடல் குழு அமைக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசிதழில் வெளியிடும் அதிகாரம் உயர்கல்வித்துறை செயலாளருக்கு உண்டு.

அதை ஆளுநரால் தடை செய்ய முடியாது. இது தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் நிலுவையில் இருப்பதால் தான் பல்கலைக்கழகங்களுக்கு புதிய துணை வேந்தர்களை நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து விசாரணைக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த வழக்கில் சாதகமான தீர்ப்பைப் பெற்று 5 பல்கலைக்கழகங்களுக்கும் துணைவேந்தர்களை நியமிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

அதுமட்டுமின்றி, பல்கலைகழகங்களின் துணைவேந்தர்கள் தேர்வுக்குழு, ஆட்சிக்குழு, பேரவைக் குழு ஆகியவற்றை நியமிக்கும் முறைகள், அதிகாரம் ஆகியவை குறித்த விதிகள் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் மாறுபடுவதால், அனைத்துப் பல்கலைக்கழகளுக்கும் ஒரே மாதிரியான விதிகளை உருவாக்கும் வகையில் பொது பல்கலைக்கழக சட்டம் இயற்றவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x