Published : 10 Aug 2024 11:02 AM
Last Updated : 10 Aug 2024 11:02 AM
தாம்பரம்: தாம்பரம் அருகே கஸ்பாபுரம் கிராமத்திலிருந்த கோலாட்சி அம்மன் கோயில் சிலை திருடப்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது. அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தாம்பரம் அருகே அகரம் தென் ஊராட்சியில் கஸ்பாபுரம் என்ற இடத்தில் கோலாட்சி அம்மன் திருக்கோயிலிருந்தது. இந்த கோயிலில் உள்ள அம்மனை அந்த கிராமத்து சார்ந்த குறிப்பிட்ட 3 சமூகத்தைச் சார்ந்தவர்கள் மற்றும் கிராம மக்கள் வழிபட்டு வந்தனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு இந்த கோயிலில் திருப்பணி நடைபெற்றது.
அப்போது மற்ற சமூகத்தினர் ஏன் எங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் கோயில் திருப்பணி மேற்கொள்கிறீர்கள் என கேள்வி எழுப்பியபோது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து இது எங்கள் மூதாதையர் உங்களுக்குச் சம்பந்தம் இல்லை எனக்கூறி வழிபட அனுமதி மறுத்துவிட்டனர்.
இதனையடுத்து கிராமத்தின் இரு குறிப்பிட்ட சமூகத்தினர் சேர்ந்து கோலாச்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்திலிருந்த வேப்ப மரத்தடியில் கோலாட்சி அம்மன் என பெயர் சூட்டி கற்சிலையை வைத்துக் கடந்த ஏழாம் தேதி முதல் பூஜை செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு 7 மணிக்குப் பூஜை செய்துவிட்டு இன்று காலை (சனிக்கிழமை) மீண்டும் 6:00 மணிக்குப் பூஜை செய்யப் பூசாரி மனோகர் வந்தார்.
அப்போது சாமி சிலை திருடப்பட்டு இருப்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தார். இந்த விவகாரம் கிராமத்தில் காட்டுத்தீ போல் பரவியது. இதனால் கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டது. பொதுமக்கள் அங்குக் குவிந்தனர். தற்போது சேலையூர் போலீஸார் அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாகக் கிராம மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீஸார், இந்து அறநிலையத்துறை, வட்டாட்சியர் ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT