Published : 10 Aug 2024 06:35 AM
Last Updated : 10 Aug 2024 06:35 AM

இலங்கை கடற்படை அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பல்வேறு அரசியல்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழக மீனவர்கள் கைது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: வங்கக்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 32 பேர்,4 நாட்டுப் படகுகளை இலங்கைகடற்படையினர் சிறைபிடித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து அராஜக முறையில் சிறைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், இதற்கு நிரந்த தீர்வு காண மத்திய அரசு போதிய முயற்சிகள் எடுக்கவில்லை. தமிழக மீனவர்களும் இந்தியர்கள் தான் என்பதை மனதில்கொண்டு, இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்கள் பிரச்சினைக்கு மத்திய அரசு நிரந்த தீர்வு காண வேண்டும்.

பாமக தலைவர் அன்புமணி: ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மீன்பிடித் தடைக்காலம் முடிவடைந்து வங்கக்கடலுக்கு செல்லும் மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது நடப்பாண்டில் அதிகரித்துள்ளது. தொடர் அத்துமீறலில் ஈடுபட்டு வரும் இலங்கை கடற்படைக்கு இந்தியா கடுமையான பாடம் புகட்ட வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலசெயலாளர் இரா.முத்தரசன்: தமிழகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 32 பேரை மறுபடியும் இலங்கைக் கடற்படை கைதுசெய்திருக்கிறது. இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில், இந்திய கப்பற்படை, கடலோர காவல் படை ஆகியவையும் இருக்கின்றன. ஆனால் அவை ஏன் இந்திய மீனவர்களை பாதுகாக்க தவறுகின்றன? இந்தப் பிரச்சினைக்கு மத்திய அரசு நிரந்த தீர்வு காண வேண்டும்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்: தமிழகத்தில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிக்க செல்வது பின்பு இலங்கை கடற்படையினரால் கைது செய்வது என்பது வாடிக்கையாகிவிட்டது. எல்லையை தாண்டுவது என்பது மீனவர்களால் திட்டமிட்டு நடப்பதல்ல. எனவே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விடுவிக்க மத்திய அரசுக்கு, தமிழக முதல்வர் கடிதம் எழுத வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தது கண்டிக்கத்தக்கது. இலங்கை கடற்படையினர் கைது நடவடிக்கையை நிறுத்த மத்திய அரசு, இலங்கையுடன் உடனடிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 30-க்கும் மேற்பட்டோரை இலங்கை கடற்படை கைது செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தொடர்கதையாகி வரும் இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நிரந்தர தீர்வை மத்திய அரசு காண வேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
     
    x
    News Hub
    Icon