Published : 10 Apr 2014 06:08 PM
Last Updated : 10 Apr 2014 06:08 PM
கடந்த வாரம் இனிப்பு கொடுத்து உபசரித்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இன்று அதிகாலை இரும்புத் தடியால் தாக்குதல் நடத்தி துரத்தினர். இதில் 4 மீனவர்கள் காயமடைந்தனர்.
கடந்த மாதம் இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்த நிலையில், அதிபர் மகிந்த ராஜபக்சே இலங்கைச் சிறையில் வாடிய தமிழக மீனவர்கள் 98 பேரையும் விடுதலை செய்து உத்திரவிட்டார்.
மேலும், கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களுக்கு கடந்த வாரம் இலங்கை கடற்படை வீரர்கள் இனிப்புகளையும், குளிர்பானங்களையும் வழங்கினர்.
இலங்கை கடல் எல்லையில் மீன் பிடிப்பதாகக் கூறி, தமிழக மீனவர்களை தாக்குவது, கைது செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினரின் இந்த திடீர் மாற்றம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து புதன்கிழமை 300-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். பாக்ஜலசந்தி கடற்பரப்பில் மீனவர்கள் நள்ளிரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் தங்களின் ரோந்துப் படகுகளின் மூலம் மீனவர்களின் விசைப் படகை சேதப்படுத்தினர். இதனால், புவனேந்திரன் என்பவரது விசைப்படகு சேதமடைந்தது.
மேலும், "வலைகளை வெட்டி கடலில் எறிந்தாகவும், கற்கள் மற்றும் சோடாப்பாட்டில் மற்றும் இரும்புத் தடி கொண்டு எங்கள் மீது தாக்குதல் நடத்தி, 'இது இலங்கை கடற்பகுதி இங்கு மீன்பிடிக்கக் கூடாது' என இலங்கை கடற்படையினர் எச்சரிக்கை செய்தனர்" என்று கரை திரும்பிய மீனவர்கள் தெரிவித்தனர்.
இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் காயமடைந்து கரை திரும்பிய சங்கர், ராஜீ, முனியசாமி மற்றும் ஆயன்தாஸ் ஆகிய 4 மீனவர்கள் ராமேஸ்வரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து நமது செய்தியாளரிடம் பேசிய ராமேஸ்வரம் விசைப் படகு மீனவர் பிரதிநிதி எம்ரிட் கூறும்போது, "கடந்த வாரம் இலங்கை கடற்படையினர் ஜெகதாப்பட்டிணம் மீனவர்களுக்கு இனிப்புகளும், குளிர்பானங்களும் வழங்கினர். ஆனால் இன்றோ இரும்புத் தடி கொண்டு ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். கடந்த ஐந்து தினத்தில் இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது நடத்தும் இரண்டாவது தாக்குதல் ஆகும்.
டி20 கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் என இந்திய மக்கள் முழுவதும் வேண்டிக் கொண்டனர். ஆனால், மீனவ சமுதாயம் தங்களின் உணர்வுகளை மலுங்கடித்துக் கொண்டு இலங்கையிடம் இந்தியா தோற்றபோது கூட கடலில் பிரச்சினையின்றி தொழில் செய்யலாம் என சந்தோஷப்பட்டோம். மீனவர்கள் மீதான இத்தகைய தொடர் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT