Published : 09 Aug 2024 09:31 PM
Last Updated : 09 Aug 2024 09:31 PM
சென்னை: நாடு முழுவதும், வரும் அக்டோபர் 29 முதல் நவம்பர் 28-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகளை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம், தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களை தவிர்த்து இதர மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி ஆண்டுதோறும், குறிப்பிட்ட காலகட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, ஆகஸ்ட் முதல், டிசம்பர் வரையில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இதற்கிடையில், தற்போது ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் முதல் தேதிகளில் தகுதியானவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளுக்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ள இந்திய தேர்தல் ஆணையம், பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள ஹரியாணா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர் தவிர்த்த மற்ற மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் இதற்கான கடிதத்தை அனுப்பியுள்ளது.
குறிப்பாக, 2025-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதியேற்கும் நாளாக கொண்டு 18 வயது நிறைவடைந்தவர்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க உத்தரவிட்டுள்ளது.
மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகளுக்கு முன்னதாக, ஆக.20 முதல் அக்.18ம் தேதி வரை வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாக சென்று பட்டியலை சரிபார்க்க வேண்டும், வாக்குச்சாவடிகளை சீரமைக்க வேண்டும்.
வாக்காளர்பட்டியலில் உள்ள தவறுகளை திருத்தம் செய்ய வேண்டும். வாக்காளர்களின் தெளிவாக இல்லாத , மோசமாக உள்ள புகைப்படங்கள் , மனிதன் இன்றி வேறு படம் இடம் பெற்றிருந்தாலோ அவற்றை அகற்றி சரியான தரமான புகைப்படங்களை பெற்று இணைத்தல், உரிய பாக எண் அடிப்படையில் அதற்குட்பட்ட பகுதியில் வாக்குச்சாவடியை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து, அக்.19 முதல் 28ம் தேதி வரை, உரிய படிவங்களை தயாரித்தல் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதன்பின், அக்.29ம் தேதி வரைவுவாக்காளர் பட்டியலை வெளியட வேண்டும். அன்று முதல் வாக்காளர் பட்டியல் பெயர்சேர்த்தல், நீக்கம் செய்தல், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றுக்கான விண்ணப்பங்களை பெறும் பணியை தொடங்க வேண்டும். நவ.28ம் தேதி வரை விண்ணப்பங்களை பெற வேண்டும்.
இதற்கிடையில், இரண்டு சனி மற்றும் இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்களை மாநில தலைமை தேர்தல் அதிகாரிகள் முடிவு செய்து நடத்த வேண்டும். பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீதான பரிசீலனையை டிச.24ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். 2025ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி, தரவுகளை முழுமை செய்து வாக்காளர் பட்டியலை தயாரித்து, துணைப்பட்டியலையும் அச்சிட வேண்டும். இறுதி வாக்காளர் பட்டியலை அடுத்தாண்டு ஜனவரி 6-ம் தேதி வெளியிட வேண்டும், என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT