Published : 09 Aug 2024 09:28 PM
Last Updated : 09 Aug 2024 09:28 PM
சென்னை: “ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் எனக்கும் துளி அளவும் சம்பந்தம் இல்லை” என போலீஸாரின் விசாரணை முடிந்து வெளியே வந்த பால் கனகராஜ் திட்டவட்டமாக தெரிவித்தார்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் பாஜக மாநில துணை தலைவர் பால் கனகராஜ் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் உள்ள ரவுடிகள் தடுப்பு பிரிவில் வெள்ளிக்கிழமை காலை நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவரிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணை முடிந்து வெளியே வந்த பால் கனகராஜ் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “33 ஆண்டுகளாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறேன். பல்வேறு குற்றவாளிகளுக்கு வழக்கு நடத்தியவன் என்ற முறையில் என்னை விசாரிப்பதினால் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் துப்பு ஏதும் கிடைக்கலாம் என்ற கோணத்தின் அடிப்படையில் என்னை விசாரணைக்காக அழைத்து விசாரித்தனர்.
பல்வேறு தரப்பில் கேள்விகள் எழுப்பப்பட்டது. நான் நடத்திய வழக்குகளில் குற்றவாளிகளாக இருந்தவர்கள் பெயரை குறிப்பிட்டு கேட்டு அவர்களுக்கு உண்டான தொடர்பு, அவர்கள் என்னிடம் பேசிய தொலைபேசி தகவல்கள் எல்லாம் வைத்து விசாரித்தனர். இந்தக் கொலையில் என் மூலம் ஏதாவது துப்பு கிடைக்குமா என்பதற்காக அழைத்தனர். நான் எனக்கு என்ன தெரியுமோ அதை அவர்களுக்கு தெரிவித்து முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். இந்தக் கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என முடிவு செய்துள்ளார்கள். இந்தக் கொலையில் எனக்கு துளி அளவும் சம்பந்தம் இல்லை. கொலை செய்தவர்கள் யார் என எனக்கு நேரடியாக தெரியாது என்பதை தெளிவாக எடுத்து சொல்லி உள்ளேன்.
இந்த விசாரணை சுமுகமாக முடிந்தது. ஆனால், அதிக நேரம் எடுத்துக் கொண்டது. உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் போலீஸார் தீவிரமாக உள்ளனர். என்னை விசாரித்ததில் தவறு இல்லை. அனைத்து கோணங்களிலும் போலீஸார் விசாரித்தனர். 2015-ல் எனக்கும் ஆம்ஸ்டராங்குக்கும் சிறு கருத்து வேறுபாடு இருந்தது. அதுவும் ஒரே வாரத்தில் சரியாகி விட்டது. பின்னர் 2016 முதல் 2024 வரை நெருங்கி பழகி வந்தோம். எங்களுக்குள் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment