Published : 09 Aug 2024 09:14 PM
Last Updated : 09 Aug 2024 09:14 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிமன்ற ஆய்வுப் பணிகளுக்காக வந்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளான என்.ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் எஸ்.சவுந்தர் ஆகியோர், கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் அருந்தி பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு சைக்கிள் மற்றும் புத்தாடைகள் வழங்கினர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட மற்றும் முதன்மை நீதிமன்றம், சார்பு நீதிமன்றம் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் விரைவு நீதிமன்றம் என 11 நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. இந்த நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளான என்.ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் எஸ்.சவுந்தர் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதியும் கலந்துகொண்டார்.
ஆய்வுப் பணிக்களுக்கிடையே கள்ளக்குறிச்சி மாவட்ட வழக்கறிஞர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் நீதிபதிகள் பங்கேற்றனர். கள்ளச் சாராயம் குடித்து சுரேஷ்-வடிவுக்கரசி தம்பதியினர் உயிரிழந்தனர். இதனால் அவர்களது 3 குழந்தைகளும் ஆதரவற்றவர்கள் ஆகினர். அக்குழந்தைகளுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தினர் உதவ முன்வந்தனர். ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்கு வந்திருந்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளான ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் சவுந்தர் ஆகியோர் மூலம் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு புத்தாடைகள் மற்றும் சைக்கிள் வழங்கி ஆதரவு தெரிவித்தனர்.
முன்னதாக, உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் ஆய்வு செய்த நீதிபதிகளைச் சந்தித்த உளுந்தூர்பேட்டை வழக்கறிஞர்கள், உளுந்தூர்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஏற்படுத்தவேண்டும் எனவும், அம்பேத்கரின் உருவப்படத்தை உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் வைக்க அனுமதி வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT