Published : 09 Aug 2024 07:36 PM
Last Updated : 09 Aug 2024 07:36 PM

“வேலை இல்லை... பட்டினி கிடக்குறோம்!” - மாஞ்சோலை தொழிலாளர்கள் நிலை என்ன? | HTT Explainer

நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள மலைக் கிராமங்களான மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து ஆகிய பகுதிகளில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நான்கு தலைமுறைகளாக சுமார் 96 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். அந்தத் தேயிலைத் தோட்ட நிறுவனத்தின் ஒப்பந்த காலம் முடிவடைய இன்னும் 4 ஆண்டுகள் உள்ள நிலையில், நிறுவனத்தை மூடுவதற்கான பணிகளை அந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதனால், வேலை இல்லாமல் மக்கள் அங்கு ரேஷனில் வழங்கும் அரிசியைக் கஞ்சியாகக் காய்ச்சிக் குடிக்கும் நிகழ்வு பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் பகுதியில் மாஞ்சோலை எஸ்டேட் அமைந்திருப்பதாலும், அது காப்புக்காடாக இருப்பதாலும், வரும் 2028-ம் ஆண்டுக்குள் தொழிலாளர்கள் வெளியேறுமாறு கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி தேயிலைத் தோட்ட நிர்வாகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், குத்தகை காலம் முடிவடைவதற்கு முன்னரே பி.பி.டி.சி நிறுவனம் தொழிலாளர்களை அங்கிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கியது. இதற்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டது. இதில், தொழிலாளர்களை வெளியேற்றுவதற்கான தடையை நீட்டித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வசதிகளைச் செய்து தரும் வரை அவர்களை அங்கிருந்து வெளியேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறது.

இந்த நிலையில், மாஞ்சோலை தேயிலைத் தோட்ட நிர்வாகம் கடந்த மாதம் 15-ம் தேதி தனது உற்பத்தியை நிறுத்திக் கொண்டது. இதனால் அப்பகுதி மக்களுக்கு வேலை இல்லாமல் பரிதவித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 45 நாட்கள் வேலை இல்லாததால், உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அப்பகுதியிலுள்ள கீரைகளையும், நியாய விலை கடைகளில் கொடுத்த அரிசியை அனைவரும் ஒன்றாக இணைந்து கஞ்சி காய்ச்சி குடித்து தங்கள் பசியைப் போக்கி வருவது காண்போரைக் கண்கலங்க வைக்கிறது.

இது குறித்து நம்மிடம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் சிலர் பேசினர். “இந்த மலையைத் தேயிலைத் தோட்டமாக மாற்றியதே நாங்கள்தான். கள்ளச் சாராயம் குடித்து மரணித்தவர்களுக்குத் தமிழக அரசு ரூ.10 லட்சம் வழங்குகிறது. ஆனால், அரசு எங்களைக் கண்டுகொள்ளவில்லை. இனி நாங்கள் வாழ்வதும் பசியில் சாகுறதும் அரசு கையில் தான் இருக்கிறது” எனக் குரல் நடுங்கப் பேசினார் தேயிலைத் தோட்டத் தொழிலாளி ஒருவர்.

மற்றொரு தொழிலாளியோ, “இங்கு இத்தனை ஆண்டு காலம் வேலை செய்துவிட்டோம். இதனால், வேறு எங்கு வேலை கேட்டாலும் யாரும் தருவதில்லை. வாடகைக்கு வீடு கேட்டாலும் முன் தொகையாக ரூ.2 லட்சம் கேட்கிறார்கள். நிறுவனம் கொடுத்த 2 லட்சம் வி.ஆர்.எஸ் தொகை வீட்டுக்கே சென்றுவிடும். அதன்பின் நாங்கள் சாப்பாட்டுக்கு என்ன செய்வது? முதல்வர் வெற்றி பெற்று வந்தால் எங்களுக்கு நல்லது செய்வார் என நினைத்தோம். தன் கட்சிக்கு ஓட்டுப் போடாதவர்களுக்கும் தன்னுடைய அரசு நல்லது செய்யும் என்று சொன்னார் முதல்வர். எங்களுடைய ஒரு ஓட்டாவது அவருக்குப் பதிவாகியிருக்கும் இல்லையா? அதற்காவது முதல்வர் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும். ஆனால், ஏன் எங்கள் பிரச்சினைக்குச் செவிக்கொடுக்காமல் இருக்கிறார்” என தெரியவில்லை என்றார் மற்றொரு தொழிலாளி.

மேலும், “மலைக்குக் கீழே வாருங்கள் உங்களுக்கு எல்லாம் செய்கிறோம் என்கிறார்கள். இத்தனை நாட்களாக இங்கு சோறு இல்லாமல் கிடக்குறோம். யாரும் கண்டுகொள்ளவில்லை. இதில் மலையைவிட்டு இறங்கினால் அரசு உதவி செய்யும் என்பதை எப்படி நம்ப முடியும்? அரசுதான் எங்களின் பசியைப் போக்கவில்லை. பிற கட்சிக்காரர்கள் சாப்பாடு கொண்டுவந்தாலும் கூட தடுத்து நிறுத்துகிறார்கள். இங்கு பேருந்து வசதி கூட சரியாக இல்லை. அதனால், ரேஷனில் மாதம் ஒருமுறை வழங்கும் பொருட்களை வாங்குவது கூட சிரமமாகவுள்ளது. மாஞ்சொலை என்று சொன்னாலே அரசு மவுனமாகிவிடுகிறது” என தங்களின் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்க்கிறார்கள் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள்.

தமிழக அரசின் ’டான்-டீ’ நிறுவனமே தேயிலைத் தோட்டத்தை எடுத்து நடத்த உத்தரவிடக் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த விசாரணையில்,”மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை டான்-டீ நிர்வாகத்துக்கு வழங்குவது சாத்தியமற்றது” என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இந்த வழக்கு மீண்டும் வரும் 14-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

தமிழக அரசு மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை டான்-டீ வாயிலாக எடுத்து நடத்த ஏன் தயக்கம் காட்டுகிறது என்பது தெரியவில்லை. ஆனால், அரசே தேயிலைத் தோட்டத்தை எடுத்து நடத்த வேண்டும் என்பதுதான் தொழிலாளர்களின் முக்கியமான கோரிக்கையாக இருக்கிறது. மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பொறுத்தவரையிலும் ஒவ்வொருமுறையும் நீதிமன்றம் சென்றுதான் தங்களின் கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். ஆனால், வாய்ப்பு இருந்தும் மாஞ்சோலை தொழிலாளர்களைக் கை தூக்கிவிடாமல் தமிழக அரசு வஞ்சிக்கிறதோ என்னும் கேள்வி எழாமல் இல்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x