Last Updated : 09 Aug, 2024 04:48 PM

 

Published : 09 Aug 2024 04:48 PM
Last Updated : 09 Aug 2024 04:48 PM

விழுப்புரத்தில் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தின் கீழ் 6,751 மாணவர்கள் பயன்பெறுவர்: அமைச்சர் மஸ்தான் தகவல்

விழுப்புரம் மாவட்டத்தில் அமைச்சர் மஸ்தான் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தினை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கினார்.

விழுப்புரம்: “விழுப்புரம் மாவட்டத்தில், தமிழக முதல்வரின் ‘தமிழ்ப் புதல்வன்’திட்டத்தின் கீழ் 6,751 உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும்,” என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.

கோவையில் இன்று (ஆக.9) தமிழக முதல்வர் ஸ்டாலின், உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து விழுப்புரத்தில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். பயனாளி மாணவர்களுக்கு வங்கியின் டெபிட் கார்டுகளை வழங்கி அவர் பேசுகையில், “விழுப்புரம் மாவட்டத்தில் இத்திட்டத்தின்கீழ், 77 கல்லூரிகளில் 2, 3, 4 மற்றும் 5-ம் ஆண்டுகளில் பயிலும் 6,751 மாணவர்களுக்கு கல்லூரி படிப்பு முடியும்வரை மாதந்தோறும் ரூ.1,000 வீதம் உதவித் தொகை வழங்கப்படவுள்ளது. இதேபோல் ‘புதுமைப்பெண்’ திட்டத்தின் கீழ், விழுப்புரம் மாவட்டத்தில், 87 கல்லூரிகளில் 11,057 மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது” என்றார்.

இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் ஆட்சியர் பழனி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், எம்எல்ஏ-க்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா , மணிக்கண்ணன், மயிலம் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ஜெயச்சந்திரன், விழுப்புரம் நகர்மன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி, மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் ஷீலா தேவி சேரன், மாவட்ட சமூக நல அலுவலர் ராஜம்மாள், அரசு சட்டக்கல்லூரி முதல்வர் கிருஷ்ணலீலா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மாவட்ட நிர்வாகத்தால் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல்

புறக்கணிக்கப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! இந்நிகழ்ச்சிக்காக தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலில் திமுக எம்பிக்கள், எம்எல்ஏ-க்கள், பாமக எம்எல்ஏ மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால், அதிமுக எம்எல்ஏ-க்களான திண்டிவனம் அர்ஜூணன், வானூர் சக்கரபாணி ஆகியோரது பெயர்கள் இடம்பெறவில்லை. இவர்களது பெயர்களை மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டு புறக்கணித்ததாக அதிமுகவினர் குற்றம் சாட்டினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x