Published : 09 Aug 2024 04:29 PM
Last Updated : 09 Aug 2024 04:29 PM
சென்னை: மெரினா கடற்கரை அருகில் நொச்சிக்குப்பத்தில் கடந்த 2 ஆண்டுகளாகக் கட்டப்பட்டு வந்த 366 கடைகளுடன் கூடிய பெரிய மீன் அங்காடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் ஆக.12-ம் தேதி திறந்து வைக்கிறார்.
சென்னை மெரினா கடற்கரையை அடுத்த, பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டியுள்ள லூப் சாலையின் இருபுறமும், தற்போது மீனவர்கள் கடை அமைத்து மீன் விற்பனை செய்து வருகின்றனர். இரவு நேரத்தில் கரையோரத்தில் பிடிக்கப்படும் மீன்கள் வலையிலிருந்து எடுத்தும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், வார இறுதி நாட்களில் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
மேலும், தற்போது மெரினா கடற்கரை சேவைச் சாலையை ஒட்டிய பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால், வார இறுதி நாட்களில் மெரினா கடற்கரை வரும் பொதுமக்களில் பலர், பட்டினப்பாக்கம் லூப் சாலையில் வாகனங்களை நிறுத்திவிட்டு, கடற்கரைக்குச் செல்கின்றனர். இதனாலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே, இப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், மீனவர்களும் பொதுமக்களும் பயன்பெறும் வகையிலும், சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை லூப் சாலையில் நவீன மீன் அங்காடி அமைக்கப்படும் எனச் சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தின் போது, நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு அறிவித்திருந்தார்.
இதையடுத்து, ரூ.9.97 கோடி மதிப்பில், நொச்சிக்குப்பம் பகுதியில், மீனவர்கள் குடியிருப்புகளுக்கு நடுவில், அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன மீன் அங்காடி கட்டுமானப்பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தன. இப்பணிகள் தற்போது முடிக்கப்பட்டுள்ளதால், வரும் ஆக.12-ம் தேதி மீன் அங்காடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறக்க உள்ளார்.
இந்த நவீன மீன் அங்காடியில் 366 மீன் கடைகள், மீனவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான குடிநீர், கழிப்பறை வசதிகள், மீன்களைச் சுத்தம் செய்யத் தனியாக 2 பகுதிகள், இந்த அங்காடி வளாகத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரைச் சுத்திகரித்த பின் வெளியேற்றும் வகையில். கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம், 60 இருசக்கர வாகனங்கள், 110 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்தம், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் மற்றும் உயர் கோபுர மின் விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT