Published : 09 Aug 2024 04:20 PM
Last Updated : 09 Aug 2024 04:20 PM
சென்னை: “வழக்குகளில் உள்ள உண்மையை வெளிக்கொண்டு வர வழக்கறிஞர்கள் நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் செயல்பட வேண்டுமென,” உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ். சுந்தர் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு அரசின் சட்டத்துறை மற்றும் மெட்ராஸ் பார் அசோசியேஷன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள சட்டக்கல்லூரி மாணவர்களுக்கான 3 நாள் பயிலரங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஆக.9) காலை தொடங்கியது. இந்த பயிலரங்கை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் பேசியதாவது: “வழக்காடுவது என்பது ஒரு கலை. அந்தக் கலையை அனைத்து இளம் வழக்கறிஞர்களும் தங்களுக்கானதாக உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
வழக்கறிஞராக நான் பணியைத் தொடங்கிய போது, ஆங்கிலத்தில் நீதிமன்றத்தில் பேச தயக்கமும், அச்சமும் இருந்தது. ஆனால், அதை சரிசெய்து கொண்டதால் தற்போது நீதிபதியாக உள்ளேன். இளம் வழக்கறிஞர்கள் அதிகமாக புத்தகம் வாசிக்கும் பழக்கத்தையும், எதையும் ஆழமாக கூர்ந்து கவனிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போதுதான் வழக்கை நீதிமன்றத்தில் நடத்தும் முன்பாக அதன் சாராம்சத்தை எளிமையாக நீதிபதிகளுக்கு விளக்கவும் அதை கதை போல் சொல்லும் திறமையை வளர்த்துக் கொள்ளவும், வாதத்தை தெளிவாக எடுத்து வைக்கவும் முடியும்.
மேலும், நீதிமன்ற விசாரணையின் போது நீதிபதிகளின் கேள்விக்கு உகந்த பதில்களை வழங்கினாலே வழக்கில் விரைந்து தீர்வு காணலாம். வழக்குகளில் உண்மையை வெளியே கொண்டுவர வழக்கறிஞர்கள் நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் செயல்பட வேண்டும்” என்று அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் தமிழக அரசின் சட்டத்துறை செயலாளர் ஜார்ஜ் அலெக்சாண்டர், மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவர் பாஸ்கரன், சட்டக்கல்வி இயக்குநரக இயக்குநர் பேராசிரியர் ஜெ.விஜயலட்சுமி, அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் கெளரி ரமேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT