Last Updated : 09 Aug, 2024 03:37 PM

 

Published : 09 Aug 2024 03:37 PM
Last Updated : 09 Aug 2024 03:37 PM

புதுச்சேரியில் அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் இலவச மின்சாரம்: அமைச்சர் நமச்சிவாயம் உறுதி

அமைச்சர் நமச்சிவாயம் | கோப்புப் படம்

புதுச்சேரி: புதுச்சேரியில் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் இலவச மின்சாரம் தருவது பற்றி முதல்வருடன் கலந்து பேசி நடவடிக்கை எடுப்பதாக மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

புதுவை சட்டப்பேரவையில் இன்று (வெள்ளிக்கிழமை) கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதம் வருமாறு:

நாஜிம் (திமுக): "புதுவை மாநிலத்தில் உள்ள இந்து கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்களில் மின் கட்டணம் செலுத்துவதில் உள்ள சங்கடங்களை போக்கும் வகையில் வழிபாட்டுத் தலங்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க அரசு முன்வருமா? இது நடப்பு ஆண்டில் அமல்படுத்தப்படுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் நமச்சிவாயம்: "இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஆணைப்படி வழிபாட்டுத் தலங்களில் மின் கட்டணம் வீட்டு பயன்பாட்டுக்கான கட்டண பிரிவில் வசூலிக்கப்படுகிறது. அரசு ஆணைப்படி 100 யூனிட் பயன்பாட்டிற்கு கீழ் வரும் வீட்டு உபயோக நுகர்வோருக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். இந்தப் பிரிவின் கீழ் வரும் வழிபாட்டு தலங்களுக்கு 50 சதவீத மானியம் பொருந்தும். மானிய விலையில் மின்சாரம் வழங்கும் உத்தேசம் இல்லை” என்றார்.

நாஜிம்: “மின் கட்டணம் செலுத்தப் பயந்து இரவு 8 மணிக்கெல்லாம் நம் ஊரிலுள்ள வழிபாட்டுத் தலங்களில் மின் விளக்குகள் சீக்கிரமே அணைக்கப்படுகிறது.” என்றார்.

அனிபால் கென்னடி: “புதுவையில் பசிலிக்கா தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்துக்கு நள்ளிரவில் கூட பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இத்தகைய தேவாலயங்களில் இரவு முழுவதும் மின்சாரத்தை பயன்படுத்த வேண்டிய சூழல் உள்ளது. எனவே அரசு இதை கருத்தில்கொள்ள வேண்டும்” என்றார்.

அமைச்சர் நமச்சிவாயம்: “இது நல்ல விஷயம். முதல்வருடன் கலந்து பேசி வழிபாட்டுத் தலங்களுக்கு இலவச மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x