Last Updated : 09 Aug, 2024 02:41 PM

 

Published : 09 Aug 2024 02:41 PM
Last Updated : 09 Aug 2024 02:41 PM

புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்: புதிய ஆளுநரிடம் அதிமுக மனு

புதுச்சேரி: புதுச்சேரியில் 13 ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ள உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதனிடம் அதிமுக மாநிலச் செயலர் அன்பழகன் இன்று (வெள்ளிக்கிழமை) கோரிக்கை மனு அளித்தார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்றுள்ள கைலாஷ்நாதனை அதிமுக மாநிலச்செயலர் அன்பழகன் இன்று சந்தித்துப் பேசினார். அப்போது ஆளுநரிடம் அவர் அளித்த மனு விவரம்: “குஜராத் மாநில வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்து பிரதமர் மோடியின் நன்மதிப்பை பெற்ற நீங்கள், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பதவி வகிப்பது பெருமைக்குரிய விஷயம். மத்திய அரசால் நியமிக்கப்பட்ட 16-வது நிதி ஆணையத்தின் பரிந்துரையில் லடாக் மற்றம் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களை போல் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் நிதி ஒதுக்கீடு அளிக்க தாங்கள் தக்க நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

மத்திய அரசின் ஊக்குவிப்பு திட்டங்களுக்கு யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு 100 சதவீத நிதியுதவியை மத்திய அரசு வழங்க தாங்கள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஜிப்மர் உள்ளிட்ட மத்திய அரசின் நிறுவனங்களில் அனைத்து வேலைவாய்ப்புகளிலும், புதுச்சேரி மாணவர்களுக்காக 25 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் 25 சதவீத உள் ஒதுக்கீட்டை புதுச்சேரி மாணவர்களுக்காக வழங்க வேண்டும்.

மத்திய அரசின் அம்ருத் திட்டத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் 13 ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ள உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும். புதுச்சேரியில் இயங்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீட்டுக்காக கேட்டுப் பெற வேண்டும். கட்டாய கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

ரேஷன் கடைகளைத் திறந்து பொருட்கள் வழங்கவேண்டும். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத பிராந்திய இடஒதுக்கீடு புதுச்சேரியில் உயர்கல்வியில் 25 சதவீதம் வழங்கப்படுகிறது. இதனால் புதுச்சேரி பிராந்தியத்தை சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு பிராந்திய இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்.

அட்டவணை இனத்தவருக்கு சாதி சான்றிதழ் பெறுவதற்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள 1964-ம் ஆண்டு என்பதை மாற்றம் செய்து ஓபிசி பிரிவினருக்கு உள்ளது போன்று 2001-ம் ஆண்டை நிர்ணயம் செய்ய வேண்டும். சாதி சான்றிதழ் பெறும்போது தந்தை வழி என்பதை மட்டும் கருத்தில் கொள்ளாமல் தாயின் ஆதாரங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக அரசாணையாக வெளியிட வேண்டும்.” என்று அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x