Published : 09 Aug 2024 02:32 PM
Last Updated : 09 Aug 2024 02:32 PM
புதுச்சேரி: புதுச்சேரி காரைக்காலில் விரைவில் 17 புதிய படுகை அணைகள் அமைக்கப்படவுள்ளது. ஜல் ஜீவன் திட்டத்தில் 55 ஏரிகள் தூர்வாரப் படவுள்ளதாக அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரித்தார். அதேபோல், நூறு நாள் வேலைத்திட்டத்தில் குளங்களை தூர்வார இருப்பதாகவும் முதல்வர் ரங்கசாமி குறிப்பிட்டார்.
புதுவை சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது நடந்த விவாதம் வருமாறு: அங்காளன்(பாஜக ஆதரவு சுயேட்சை): செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்றில் உடைந்த படுகை அணை எப்போது கட்டப்படும்? கடந்த ஆண்டு இத்திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி வேறு துறைக்கு மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளதா?
அமைச்சர் லட்சுமிநாராயணன்: உடைந்த படுகை அணையை முற்றிலும் புதிதாக கட்டுமானம் செய்ய ரூ.20 கோடியே 40 லட்சத்துக்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசாணை பெறப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் ரூ.19 கோடியே 85 லட்சத்துக்கு கோரப்பட்டு, நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டது. மீண்டும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணியை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இது மட்டுமின்றி குடிநீருக்காக புதுவையில் உள்ள 85 ஏரிகளில் 55 ஏரிகளை ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் தூர்வாரி ஆழப்படுத்த உள்ளோம். இதற்காக மத்திய அரசிடம் விரிவான திட்ட அறிக்கையை சமர்பிக்க உள்ளோம்.
கல்யாணசுந்தரம் (பாஜக): ஏரிகளை ஆழப்படுத்துவது மட்டுமின்றி, கால்வாய்களையும் ஓடைகளையும் ஆழப்படுத்த வேண்டும்.
பி.ஆர்.சிவா(சுயே): குளங்களையும் சேர்த்து ஆழப்படுத்தினால்தான் நிலத்தடி நீர் உப்பு நீராவதை தடுக்க முடியும்.
அமைச்சர் லட்சுமிநாராயணன்: புதுவையில் 40 கி.மீ-க்குத்தான் ஆறுகள் உள்ளது. இதில் 25 தடுப்பணைகளை கட்டியுள்ளோம். 3 கி.மீ-க்கு ஒரு தடுப்பணை உள்ளது. இதை 2 கி.மீ-க்கு ஒரு தடுப்பணையாக மாற்ற உள்ளோம். இதனால் புதிதாக 17 தடுப்பணைகள் காரைக்கால், புதுவையில் அமைக்க உள்ளோம். இதன்மூலம் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும். குளங்கள் நகராட்சி பராமரிப்பில் உள்ளதால் அவற்றை ஆழப்படுத்த முடியாது.
பி.ஆர்.சிவா: நகராட்சி ஊழியர்களுக்கு சம்பளமே வழங்க முடியாத நிலையில் நிர்வாகம் உள்ளது. குளங்களை தூர்வாரி, ஆழப்படுத்தும் பணியை அவர்களால் செய்ய முடியாது. புதுவை அரசே நிதி ஒதுக்கி திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
முதல்வர் ரங்கசாமி: 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் குளங்களை துார்வாரி ஆழப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT