Last Updated : 09 Aug, 2024 01:59 PM

 

Published : 09 Aug 2024 01:59 PM
Last Updated : 09 Aug 2024 01:59 PM

பெரியாறு அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறப்பு: மதுரை கிழக்கு தாலுகாவில் முதல்போக சாகுபடி பணி தீவிரம்

சாகுபடி பணி தீவிரம்

மதுரை: முல்லை பெரியாறு பிரதான பாசனக்கால்வாய் பகுதியிலுள்ள பாசன பகுதிக்கு முதல் போக பாசனத்துக்காக பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. முதல்போக பாசனப் பரப்பான 45 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு தினமும் விநாடிக்கு 900 கனஅடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறைவைத்தும் மொத்தம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

பெரியாறு அணை வாய்க்கால் மூலம் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியில் 1,797 ஏக்கரும், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டத்தில் 16,452 ஏக்கரும், மதுரை வடக்கு, கிழக்கு வட்டத்தில் 26,792 ஏக்கரும் என சுமார் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இருபோக பாசன வசதி பெறும்.

குறிப்பாக, முல்லை பெரியாறு அணை மூலம் மதுரை மாவட்டத்திலுள்ள பேரணை முதல் கள்ளந்திரி வரையில் வாடிப்பட்டி, மதுரை வடக்கு, கிழக்கு தாலுகா பகுதியில் சுமார் 45 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் இருபோக நெல் சாகுபடி நடக்கிறது. ஆண்டுதோறும் ஜூன் முதல் ஜனவரி வரை தண்ணீர் தொடர்ந்து கிடைத்தால் இரு போக சாகுடி உறுதி செய்யப்படும்.

இவ்வாண்டுக்கான முதல்போகத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்க சற்று தாமதமானதால் ஜூன் முதல் வாரத்திற்குப் பதிலாக கடந்த 3ம் தேதி திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வாடிப்பட்டி, மதுரை வடக்கு, கிழக்கு தாலுகாக்களில் விவசாய பணிகள் தொடங்கி நடக்கிறது. கிழக்கு தாலுகாவிலும் கருப்பாயூரணி, காளிகாப்பான், ஓடைப்பட்டி, காத்தவனேந்தல், ஆண்டார்கொட்டாரம் உள்ளிட்ட கிராமங்களிலும் விவசாயப் பணி மும்மரமாக நடக்கிறது. 3 வாரங்களுக்கு முன்னபாகவே நாற்று விதைப்பு தொடங்கிய நிலையில், தற்போது நாத்து நடும் பணியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆண்டார்கொட்டாரம் உட்பட ஒருசில இடங்களில் நடவு பணி முடிந்துவிட்டது. கருப்பாயூரணி போன்ற இடங்களில் நடவு பணி தொடர்ந்து நடக்கிறது.

இதுகுறித்து விவசாயி வீரணன் கூறுகையில், “ஆண்டுதோறும் முல்லை பெரியாறு அணையில் சுமார் 4 ஆயிரம் கன அடி அளவுக்கு தண்ணீர் இருப்பு இருந்தால் மட்டுமே இருபோக சாகுடி ஓரளவுக்கு உறுதி செய்யப்படும். இவ்வாண்டு ஒரு மாதம் தாமதமாக அணை திறக்கப்பட்டாலும் தொடர்ந்து 3 மாதங்கள் தண்ணீர் வந்தால் நெல் விளைந்து விடும். முதல் சாகுபடியை ஒரு மாதம் தாமதமாக தொடங்கியதால் நவம்பரில் அறுவடை நடக்கும். இதன்பின், அடுத்த போகத்திற்கு தண்ணீர் திறந்தால் நவம்பர் கடைசியில் 2-வது சாகுபடி தொடங்கும்.

பிப்ரவரி வரை தண்ணீர் தேவைப்படும். மழை இருந்தால் மட்டுமே தண்ணீர் குறைக்கப்படும். குறிப்பாக, ஒரு சாகுபடிக்கு சுமார் 120 நாட்கள் தண்ணீர் தேவைப்படும். விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. அனைவருமே 100 நாள் வேலைக்கு முக்கியத்துவம் தருகின்றனர். போதிய ஆட்கள் கிடைக்காமல் சில விவசாயிகள் தங்களது விளை நிலங்களை தரிசாகப் போட்டு விடுகின்றனர். 100 நாள் திட்ட பணியாளர்களை விவசாயி பணிக்கு பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x