Last Updated : 09 Aug, 2024 01:44 PM

 

Published : 09 Aug 2024 01:44 PM
Last Updated : 09 Aug 2024 01:44 PM

கோவை உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்

கோவை: கோவை உக்கடத்திலிருந்து பொள்ளாச்சி, பாலக்காடு, பகுதிகளுக்கு விரைந்து செல்லும் வகையில் ரூ.481.95 கோடி மதிப்பீட்டில் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை 3.8 கி.மீ நீளத்துக்கு கட்டப்பட்ட மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆக.9) திறந்து வைத்தார்.

வாகன நெரிசலைக் குறைக்கும் வகையில் கோவை உக்கடம் - ஆத்துப்பாலம் இடையே முதல் கட்டமாக ரூ.121 கோடி மதிப்பில் மேம்பாலமும், இரண்டாம் கட்டமாக ரூ.195 கோடியில் மேம்பாலமும் கட்டும் பணி நடந்தது. மொத்தமாக நில எடுப்பு பணிக்கு ரூ.152 கோடி செலவிடப்பட்டது. மொத்தம் ரூ.481.95 கோடி மதிப்பில் இரு மேம்பால பணிகளும் நடத்தி முடிக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டன.

இந்தப் பாலத்தில் மொத்தம் 7 ஏறு, இறங்கு தளங்கள் உள்ளன. இதில், 6 ஏறு, இறங்கு தள பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்த மேம்பாலத்தை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து பயணித்தார். இந்த நிகழ்வில், நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, அமைச்சர்கள் முத்துசாமி, பொன்முடி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மேயர் ரங்கநாயகி, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், நெடுஞ்சாலை துறை அரசு செயலாளர் செல்வராஜ், தலைமைப் பொறியாளர் சத்ய பிரகாஷ், கோவை கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

30 நிமிட பயணம் "5 நிமிடங்களாக" குறைந்தது- இந்தப் பாலத்தின் பயன்பாடு குறித்து நம்மிடம் பேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், “உக்கடம் ஏறு தளம் 150 மீட்டர் நீளம், 8.45 மீட்டர் உயரத்திலும், பாலக்காடு சாலை ஏறு தளம் 162 மீட்டர் நீளம், 8.20 மீட்டர் உயரத்திலும், பாலக்காடு இறங்கு தளம் 144 மீட்டர் நீளம், 7.58 மீட்டர் உயரத்திலும் பொள்ளாச்சி சாலை இறங்கு தளம் 140 மீட்டர் நீளம், 8.40 மீட்டர் உயரத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.

சுங்கம், வாலாங்குளம் ஏறு இறங்கு தளம் அமைக்கப்பட்டு பணிகள் இறுதிக் கட்டத்தில் உள்ளன. இதற்கு முன்பு உக்கடம் ஆத்துப்பாலம், கரும்புக்கடை, போத்தனூர் சாலை பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனால் கனரக வாகனங்கள், புட்டு விக்கி ரோடு வழியாக சுமார் 3 கி.மீ தூரம் திருப்பி விடப்பட்டன. அப்படியும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆத்துப்பாலம் செல்ல சுமார் 30 நிமிடங்களாகி வந்தது.

தற்போது மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளதால் 5 நிமிடத்தில் 3.8 கி.மீ தூரத்தில் உள்ள மேம்பாலத்தை கடக்க முடியும். இப்போது அனைத்து ரக வாகனங்களும் மேம்பாலத்தை எளிதாக பயன்படுத்த முடியும். கடந்த 2019 முதல் நடந்துவந்த மேம்பாலப் பணிகள் முடிவுற்றதால் கோவை பொள்ளாச்சி, பாலக்காடு செல்லும் வாகனங்கள் இனி நெரிசலின்றி செல்ல முடியும்” என்று அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x