Last Updated : 09 Aug, 2024 01:18 PM

2  

Published : 09 Aug 2024 01:18 PM
Last Updated : 09 Aug 2024 01:18 PM

மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டம்: கோவையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

கோவை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின். படம் : ஜெ.மனோகரன்.

கோவை: அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தினை கோவை அரசு கலைக் கல்லூரியில் முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆக.9) தொடங்கி வைத்தார். அப்போது பயனாளி மாணவர்களுக்கு டெபிட் கார்டுகளையும் அவர் வழங்கினார்.

அதைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இக்கல்லூரியில் நுழைந்த உடன் நீங்கள் கொடுத்த வரவேற்பிற்கு நன்றி. இந்நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே, நேற்றிரவு உங்களது வங்கிக் கணக்கிற்கு 1000 ரூபாய் பணத்தை போட உத்தரவிட்டேன். நாள்தோறும் ஏராளமான திட்டத்தை செயல்படுத்தி வந்தாலும், ஒரு சில திட்டங்கள் தான் மனதிற்கு நெருக்கமாக இருக்கும். வரலாற்றில் பெயர் சொல்லும் திட்டமாக இருக்கும். அப்படிப்பட்ட தமிழ்ப் புதல்வன் திட்டத்தை துவக்கி வைக்க கோவைக்கு வந்துள்ளேன்.

கடந்த 3 ஆண்டுகளில் மக்களுக்கு பயனளிக்கும் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன். நாட்டிற்கே தமிழகம் தான் முன்னோடி என்று சொல்லும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். திராவிட மாடல் என்றால் சமூக நீதி அரசு எனப் பொருள். பெண்கள், மாணவர்களுக்கு பார்த்துப் பார்த்து திட்டங்களை செய்கிறோம். 518 கோடி முறை பெண்கள் விடியல் மகளிர் பயணத் திட்டத்தைய் பயன்படுத்தி உள்ளனர். மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் 1 கோடி 15 லட்சம் பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. காலை உணவுத் திட்டம் மூலம் 20 லட்சம் மாணவர்கள் காலை உணவு சாப்பிடுகிறார்கள்.

பயணத்தையும், லட்சியத்தையும் எதிர்காலத்திற்கு எடுத்துச் செல்ல துவங்கப்பட்ட திட்டம் தான், நான் முதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம். இதன் மூலம் 3 லட்சத்து 78 ஆயிரம் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் மாதந்தோறும் வழங்கப்படுகிறது. மாணவிகளுக்கு வழங்கப்படுவது போல மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமென மாணவர்கள் கேட்டார்கள். அந்தக் கோரிக்கையை ஏற்று உருவாக்கப்பட்ட திட்டம் தான் தமிழ்ப் புதல்வன் திட்டம். அரசுப் பள்ளியில் படித்து கல்லூரிக்கு வரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் வகையிலும், அரசு, அரசு உதவி மாணவர்களை சாதனையாளர்களாக மாற்றவும் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வியில் படித்து கலை அறிவியல், பொறியியல், மருத்துவம், சட்டம் சார்ந்த படிப்புகளில் சேரும் மாணவர்கள் இந்த திட்டம் மூலம் பயன்பெறுவார்கள். இத்திட்டத்தினால் தொழில் கல்வி பயிலும் மாணவர்களும் பயன்பெறலாம்.

இதற்காக 3.78 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில், 380 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணம் மாணவர்கள் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். உங்களின் குடும்பத்தில் ஒருவனாக தந்தையாக இருந்து இந்தத் திட்டத்தை கொண்டு வந்துள்ளேன். 2030-ம் ஆண்டுக்குள் தமிழகம் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடையும் நிலையை உருவாக்க வேண்டும். மேலை நாடுகளுக்கு இணையான கட்டமைப்புகள் வர வேண்டும்.

பள்ளிப் படிப்பு முடித்த எந்தவொரு மாணவரும், உயர்கல்வி படிக்காமல் திசை மாறி போய்விடக்கூடாது நல்ல வேலை வாய்ப்பை பெற வேண்டும். இது தான் என் கனவு. அதற்காக கடுமையாக உழைத்து பல புதிய திட்டங்களை உருவாக்கியுள்ளேன். உலக அளவில் முன்னணி மாநிலமாக தமிழகம் விளங்க வேண்டும். கல்வி கற்க எதுவும் தடையாக இருக்கக்கூடாது. அந்த தடைகள் உடைத்தெறியப்பட வேண்டும். தடைகளை உடைக்க உதவி செய்ய நானும், திராவிட மாடல் அரசும் உள்ளோம்.

வினேஷ் போகத் தடைகளை உடைத்து அசாத்திய துணிச்சல் உள்ள பெண்ணாக நாம் எல்லோரும் பாராட்டும் வகையில் கொடிகட்டி பறந்து கொண்டுள்ளார். தடைகள் என்பது உடைத்தெறியத்தான். தடையை பார்த்து சோர்ந்து, முடங்கி விடக்கூடாது. நான் உங்களது மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளேன். உங்களது வெற்றிக்கு பின்னால் திராவிட மாடல் அரசு இருக்கும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x