Published : 09 Aug 2024 12:21 PM
Last Updated : 09 Aug 2024 12:21 PM

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சவுக்கு சங்கர் | கோப்புப் படம்

சென்னை: யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்துள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், சமூக ஊடகங்களுக்கும் ஒழுங்குமுறை விதிகளை கொண்டு வர வேண்டியது அவசியம் என கருத்து தெரிவித்துள்ளனர்.

குண்டர் சட்டத்தை எதிர்த்து ஆட்கொணர்வு மனு: பெண் காவலர்களையும், காவல்துறை பெண் அதிகாரிகளையும் அவதூறாக பேசியதாக யூடியூபரான சவுக்கு சங்கரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து பொதுமக்கள் மத்தியில் வதந்தி பரப்பி, தமிழக அரசுக்கு எதிராக போராடத் தூண்டியதாக சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்து சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த மே மாதம் உத்தரவிட்டார். இந்நிலையில் சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

தாமதமாக வழக்குப்பதிவு: அதன்படி இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி. சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. சவுக்கு சங்கர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சி. அய்யப்பராஜ், “சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச்சட்ட உத்தரவும், அவர் மீது தொடர்ச்சியாக போடப்பட்டுள்ள வழக்குகளும் உள்நோக்கத்துடன் பதியப்பட்டவை. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற போராட்டத்துக்காக கடந்த மே மாதம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் தாமதமாக வழக்குப்பதிவு செய்து அந்த வழக்கின் அடிப்படையில் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச்சட்டத்தின்கீழ சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளனர்.

அரசுக்கு எதிராக தொடர்ச்சியாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்ற காரணத்துக்காக அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சவுக்கு சங்கர் மீது தமிழகம் முழுவதும் பல வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். அவரை கைது செய்த விவரங்களையும் யாருக்கும் தெரியப்படுத்தவில்லை. குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு தொடர்பான ஆவணங்களும் அவருக்கு முழுமையாக வழங்கப்படவில்லை. இந்த வழக்கில் அவருக்கு ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது,” என வாதிட்டார்.

அவதூறு பரப்பியதால்... அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ.ராஜ்திலக், “பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், தமிழக முதல்வர் மற்றும் தமிழக அரசுக்கு எதிராகவும், பெண் காவலர்கள் குறித்தும் இஷ்டத்துக்கு அவதூறு பரப்பிய காரணத்துக்காகவே அவர் மீது தமிழகம் முழுவதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது,” என வாதிட்டார்.

உள்நோக்கம் கொண்டது: இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: “சவுக்கு சங்கர் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தியதாக குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அதுகுறித்த காரணங்களை உத்தரவில் தெரிவிக்கவில்லை. சவுக்கு சங்கர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் அளவுக்கு தீவிரமானவையாக தெரியவில்லை. எனவே அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு உள்நோக்கம் கொண்டது என்பதால் அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

கருத்து சுதந்திரத்துக்கு கடிவாளம்... மேலும், தனிநபர்கள் மற்றும் அரசுக்கு எதிராக கருத்துக்களை தெரிவிப்போர் மீது உரிய சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள கருத்து சுதந்திரத்துக்கு குண்டர் தடுப்புச சட்டத்தின் மூலம் கடிவாளம் போட நினைக்கக்கூடாது. தற்போதுள்ள இணையதள உலகில் பல தளங்களிலும் பல்வேறு தகவல்கள் வந்து குவிகின்றன. அரசுக்கு எதிராக கருத்துக்களை தெரிவிக்கும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நேரிட்டால் எத்தனை பேர் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அனைவருடைய குரலையும் ஒடுக்கிவிட முடியுமா? குடிமக்களிடமிருந்து பலதரப்பட்ட கருத்துக்களை அரசு இயந்திரம் பெறாவிட்டால் அது உண்மையான ஜனநாயகமாக இருக்காது. சமூக ஊடக பதிவுகளுக்கும், யூடியூப் பதிவுகளுக்கும் பின்னால் அரசு செல்வதாக இருந்தால், யாருடைய கருத்தும் மாறப்போவதில்லை. மாறாக பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை முடக்குவதாகவே கருத நேரிடும். இந்தப்போக்கு ஜனநாயகம் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை இழக்கச் செய்து விடும். அரசுக்கு எதிராக ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் கருத்துக்களை தெரிவிக்கும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதன் மூலம் அனைவருடைய குரலையும் ஒடுக்கி விட முடியுமா? என்ற கேள்வியும் எழுகிறது. சமூக ஊடகங்களின் வருகைக்குப்பிறகுதான் அரசின் செயல்பாடுகள் குறித்த விவாதங்களும் அதிகரித்துள்ளது.

விடுவிக்க வேண்டும்: இது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமான ஒன்று. சாதாரண ஏழை, எளிய மக்களின் குறைகளைப் புரிந்து அதை வெளிப்படுத்தும் கருவியாக சமூக ஊடகங்களை அரசு கருத வேண்டுமேயன்றி, அவற்றை முடக்க அரசு முயற்சிக்கக்கூடாது. ஆனால் மற்ற ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள் இருப்பதுபோல சமூக ஊடகங்களுக்கும் ஒழுங்கு முறை விதிகளை கொண்டு வர வேண்டியது அவசியமான ஒன்று. அரசு நிர்வாகம் குறித்த கருத்துகளை முடக்கியதால் தான் இந்திய மக்கள் விழித்துக்கொண்டு, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சுதந்திரம் பெற்றோம். தற்போது நாட்டின் 77-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில் மீண்டும் மக்களின் குரலை ஒடுக்க வேண்டுமா? என நீதிபதிகள் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், வேறு வழக்குகளில் சவுக்கு சங்கர் தேவையில்லை என்றால் உடனடியாக அவரை விடுவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x