Published : 09 Aug 2024 04:35 AM
Last Updated : 09 Aug 2024 04:35 AM

மணல் குவாரிகளை திறக்கக்கோரி சென்னையில் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஒருங்கிணைந்த மணல் மற்றும் சவுடு லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எழும்பூர் அருகே நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்: ம.பிரபு |

சென்னை: மூடப்பட்ட மணல் குவாரிகளை திறக்கக் கோரி சென்னையில் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூடப்பட்ட மணல் குவாரிகளை திறக்கவும், காலாவதியான சுங்கச்சாவடிகளை மூடவும் வலியுறுத்தி தமிழ்நாடு ஒருங்கிணைந்த மணல் மற்றும் சவுடு லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றது.

தமிழ்நாடு எம்-சாண்ட் லாரி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எஸ்.யுவராஜ் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்தார். இதில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டம் தொடர்பாக தமிழ்நாடு கனிம வள டிப்பர் லாரி இயந்திர உரிமையாளர் நலச்சங்க தலைவர் ஐ.கே.எஸ்.நாராயணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த 2023 செப்டம்பர் மாதம் நடந்த அமலாக்கத்துறை சோதனைக்கு பிறகு மணல் குவாரிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் மணல் ஏற்றுவதற்காக பிரத்யேகமாக 6 மற்றும் 10 சக்கரங்களை கொண்ட 55 ஆயிரம் மணல் லாரிகள் வேலையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 4 லட்சம் தொழிலாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். ஆங்காங்கே கட்டிட தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

நடுத்தர, ஏழை, எளிய லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் 11 மாதங்களாக வேலையின்றி தவித்து வருவது குறித்து பலமுறை அரசுக்கு வலியுறுத்தியும் நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருப்பதாக கூறிவந்தனர். ஆனால் இன்றைக்கு மதுரை உயர் நீதிமன்றம் கனிம வள சட்டத்தில் அமலாக்கத் துறை தலையிட்டிருப்பது தவறு என்று கண்டித்ததுடன், வழக்குகளையும் தள்ளுபடி செய்துள்ளது.

இதன்மூலம் மணல் லாரி ஓட்டுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்பது உறுதியாகிறது. எனவே தமிழக அரசு உடனடியாக மூடப்பட்ட மணல் குவாரிகள் அனைத்தையும் திறக்க வேண்டும். இத்துடன் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பாலாற்றில் கடந்த 10 ஆண்டுகளாக மணல் நிரம்பிக் கிடக்கிறது. அதை பயன்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x