Published : 09 Aug 2024 05:20 AM
Last Updated : 09 Aug 2024 05:20 AM

தாம்பரம் | ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் வளர்த்த பெண்ணுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

கோப்புப் படம்

தாம்பரம்: தாம்பரம் அருகே ஜெர்மன் ஷெப்பர்ட் இன நாய் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயல்பட்டதை அடுத்து, நாய் உரிமையாளருக்கு தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.

மேற்கு தாம்பரம், திருவேங்கடம் நகர் பகுதியில் திவ்யா - சதீஷ்குமார் தம்பதி வீட்டின் அருகில் இட்லி, தோசை மாவு வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான ஜெர்மன் ஷெப்பர்ட் வகை நாயை வீட்டில் கட்டி வைத்து பராமரிக்காமல் அடிக்கடி வெளியே திரிய விட்டதாக சிசிடிவி வீடியோவுடன் செய்தி வெளியானதை தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சி கால்நடை மருத்துவர் சக்தி தேவி, சுகாதார அலுவலர், சுகாதார ஆய்வாளர் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வளர்ப்பு நாய்க்கு தாம்பரம் மாநகராட்சியில் உரிமம் பெறப்படாதது தெரியவந்தது.

மாநகராட்சி எச்சரிக்கை: மேலும் வளர்ப்பு நாய் பொது வெளியில் திரியவிட்டு, பொதுமக்களை அச்சுறுத்துவதாக நடந்துகொண்டதற்கு அதன் உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்விதிக்கப்பட்டது. இனிமேல் இதுபோல் நடந்தால் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

வீட்டில் வளர்க்கப்படும் அனைத்துநாய்களுக்கும் அதன் உரிமையாளர்கள் முறையாக தடுப்பூசி போட்டு இணையதளத்தில் 15 தினங்களுக்குள் உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நாய்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அபராத தொகை அதிகமாக இருப்பதாகவும் அதனை குறைக்கும்படி நாயின் உரிமையாளர் மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார். ஆணையரை சந்தித்து முறையிடும்படி அதிகாரிகள் தெரிவித்தனர். ஆணையரை சந்திக்க முடியாததால் அபராத தொகை செலுத்தப்படவில்லை என தெரிகிறது.

இதுவரை தாம்பரத்தில் 979 பேர் நாய் வளர்க்க உரிமம் பெற விண்ணப்பித்துள்ளனர். முறையான ஆவணங்கள் இல்லாததால் 307 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாய் வளர்ப்பவர்கள் விரைவில் சரியான ஆவணங்கள் சமர்ப்பித்து உரிமம் பெற மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x