Published : 08 Aug 2024 08:19 PM
Last Updated : 08 Aug 2024 08:19 PM

சென்னை மெட்ரோ ரயில் பணிகளால் மழைநீர் வழித்தடங்களில் அடைப்பு: தீர்வுக்கு வல்லுநர் குழு அமைப்பு

கோப்புப்படம்

சென்னை: “மெட்ரோ ரயில் பணிகளால் மழைநீர் வழித்தடங்களில் அடைப்பு ஏற்பட்டு வெள்ளம் ஏற்படுவதை தவிர்க்க ஐஐடி பேராசிரியர் உள்ளிட்ட 5 பேர் கொண்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது” என சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, மக்கள்தொகை பெருக்கத்துக்கேற்ப தொலைநோக்கு பார்வையுடன் மெட்ரோ ரயில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. அதன் தொடர்ச்சியாக மாதவரம்- சிறுசேரி, மாதவரம் - சோழிங்கநல்லூர், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி ஆகிய 3 வழித்தடங்களை அமைக்க 116 கிமீ நீளத்துக்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளால் மாநகராட்சியின் மழைநீர் வடிகால் கட்டமைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இயல்பாகவே சென்னையில் சில மணி நேரங்களில் 5 செமீ மழை பெய்தாலே பல இடங்களில் மழைநீர் தேங்கும். மெட்ரோ ரயில் பணிகளால் பல இடங்களில் மழைநீர் வழிந்தோடுவது தடைபடும் நிலையில், பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வரும் பகுதியில் அறிவியல் முறையில் மழைநீரை வெளியேற்றும் திட்டத்தை உருவாக்க மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் 5 பேர் கொண்ட வல்லுநர் குழுவை நியமித்துள்ளார்.

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் கூறியதாவது: “மெட்ரோ ரயில் நிறுவனம் பல்வேறு சாலைகளில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இப்பணிகளால் பலவேறு இடங்களில் மழைநீர் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளன. இதனால் கனமழை பெய்யும்போது வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது. எத்தனை இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளன? என்பது குறித்து இன்னும் கணக்கிடவில்லை. மெட்ரோ ரயில் நிறுவனமும், வெள்ளம் ஏற்படுவதை தடுக்க மோட்டார் மூலம் நீரை வெளியேற்றுவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையில் வடகிழக்கு பருவமழை நெருங்கி வருகிறது. இதை கருத்தில் கொண்டு தொழில்நுட்ப ஆய்வுக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில் வருவாய் நிர்வாக ஆணையரக கலந்தாலோசகர் காந்திமதிநாதன், ஐஐடி பேராசிரியர் பாலாஜி நரசிம்மன், மாநகராட்சி தலைமை பொறியாளர் ராஜேந்திரன், மெட்ரோ ரயில் நிறுவன தலைமை பொதுமேலாளர் லிவிங்ஸ்டன், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு கழக தலைமை பொறியாளர் பழனிவேல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழு ஒரு வாரத்துக்குள் தங்கள் ஆய்வை தொடங்க உள்ளது. அக்குழு அளிக்கும் பரிந்துரைகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் செயல்படுத்தி, வெள்ளநீரை வெளியேற்றும்,” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x