Published : 08 Aug 2024 06:56 PM
Last Updated : 08 Aug 2024 06:56 PM

இன்னுயிர் காப்போம் -  நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் மகத்துவம்: மாநிலங்களவையில் திமுக எம்.பி பெருமிதம்

திமுக எம்பி கனிமொழி என்விஎன் சோமு | கோப்புப்படம்

புதுடெல்லி: “விபத்தால் பாதிக்கப்படுபவர் எந்த மதம், நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், செலவே இல்லாமல் உயர்தர சிகிச்சை அளிக்க வகைசெய்யும் இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டம் என்பது சமத்துவத்தையும் சமூக நீதியையும் எடுத்துரைக்கும் மகத்தான திட்டமாகும்,” என்று மாநிலங்களவையில் திமுக எம்பி கனிமொழி என்.வி.என். சோமு பேசினார்.

மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கனிமொழி என்.வி.என். சோமு பேசியதாவது: “2024-25 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் சுகாதாரத் துறை தொடர்பான சில முக்கிய விஷயங்களை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில், சுகாதாரத் துறைக்கென மொத்தமாக ஒதுக்கப்பட்ட தொகை சுமார் 91 ஆயிரம் கோடிகள் மட்டுமே. இது போதுமானதாக நிச்சயம் இருக்க முடியாது.

குறிப்பாக மருத்துவ ஆராய்ச்சிக்கென இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு ஒதுக்கப்பட்ட தொகை 3 ஆயிரத்து 300 கோடி ரூபாய். பல்வேறு நோய்கள் புதிது புதிதாக உருவாகிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் முழு அளவிலான ஆராய்ச்சிகளுக்கு இந்தத் தொகை எப்படிப் போதுமானதாக இருக்கும்? சுகாதாரத்துறை தொடர்பாக கசப்பான உண்மைகளுடன் கூடிய கடினமான கேள்விகளை இங்கே எழுப்பினால், சுகாதாரத் துறை மாநில அரசின் வரம்புக்குள் வருகிறது என்று பதில் சொல்கிறது மத்திய அரசு.

ஆனால் தேசிய சுகாதார ஆணையம் போன்ற அமைப்புகளை வைத்துக்கொண்டு கூட்டாட்சித் தத்துவத்தை நசுக்கும் வகையில் நாடு முழுக்க சுகாதாரத் துறையில் ஆதிக்கம் செலுத்துவது மத்திய அரசுதான். பலப்பல மாநிலங்கள் எதிர்த்தபோதும் நீட் தேர்வுகளை தொடர்ந்து மத்திய அரசு நடத்துவது ஒரு சிறந்த உதாரணம்.சுகாதாரத் தேவைகள் பூர்த்தியாகாமல் ஒருவர் கூட விடுபடக் கூடாது என்ற கோஷத்துடன் ஆரம்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் சுகாதாரத் திட்டத்துக்கு 7300 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. உண்மையில் இந்தத் தொகை சிலகோடி பேரையாவது இத்திட்டத்தில் சேர்க்க முடியாமல் தவிர்க்கும் அளவுக்கு சிறிய தொகை என்பதை மத்திய அரசு உணரவில்லை.

மருத்துவக் காப்பீட்டு திட்டத்திலும் பெரும் குழப்பங்களும், குறைபாடுகளும் நிலவுகிறது. ஒரு அறுவை சிகிச்சையை அரசு மருத்துவமனையில் செய்வதற்கு ஆகும் செலவுக்கும் தனியார் மருத்துவமனையில் செய்வதற்கு ஆகும் செலவுக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. ஆனால் இதை முழுமையாக ஆய்வு செய்யாமல் ஏதோ ஒரு தொகையை நிர்ணயிப்பதால் தனியார் மருத்துவமனைகளில் நியாயமாக ஆகும் செலவுகளை குறிப்பிட்டு ஆவணங்களை அனுப்பினால் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அவற்றை நிராகரிக்கின்றன. எனவே மத்திய அரசு, ஒரு நிபுணர் குழுவை நியமித்து இதுபோன்ற சிகிச்சைகளுக்கு ஆகும் கட்டணங்களை நியாயமான முறையில் வரையறுக்க வேண்டும்.

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 4523 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ள மத்திய அரசு, அறிவித்து சுமார் ஆறாண்டுகளாகியும் ஒரு சுவர் கூட கட்டப்படாத மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பற்றி பாராமுகமாக இருப்பதும் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் வேதனை அளிப்பதாக உள்ளது. எங்கள் துடிப்புமிக்க தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, மருத்துவத் துறையில் பல மகத்தான சாதனைகளைச் செய்துவருகிறது. மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48, போன்ற எண்ணற்ற திட்டங்கள் அடிமட்ட ஏழைகளுக்கு தரமான, எளிதான சிகிச்சை வசதி அளிப்பதை உறுதி செய்கின்றன.

விபத்தில் படுகாயம் அடைபவர்களின் உயிரைக் காக்க வாய்ப்புள்ள கோல்டன் ஹவர்ஸ் என்று சொல்லப்படும் அந்த முக்கியமான நேரத்து சிகிச்சை வசதி மற்றும் அதற்கான சூழலை ஏற்படுத்தித் தருவதில் இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டம் மகத்தான இடத்தைப் பிடித்திருக்கிறது. இதன் மூலம் ஆயிரக் கணக்கான உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன.விபத்தால் பாதிக்கப்படுபவர் எந்த மதம், நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், செலவே இல்லாமல் உயர்தர சிகிச்சை அளிக்க வகைசெய்யும் இந்தத் திட்டம், சமத்துவத்தையும் சமூக நீதியையும் எடுத்துரைக்கும் மகத்தான திட்டமாகும்.

2022-ம் ஆண்டில் இந்தியாவில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 14.13 லட்சம் பேர். அதன்காரனமாக மரணித்தவர்கள் 9.16 லட்சம் பேர். இந்த வேதனையான உண்மைகளை மனதில் கொண்டு, ஒவ்வொரு புற்றுநோயாளிகள் தொடர்பான புள்ளி விவரங்களை ஆவணப்படுத்த வேண்டியது மிக அவசியமாகும். தற்போது நடைமுறையில் உள்ள எந்தப் புள்ளிவிவர ஏற்பாடும் முழுமையான உண்மையை பிரதிபலிப்பதாக இல்லை. இந்த நிலையை மத்திய அரசு மாற்ற வேண்டும்.

அதேபோல, உடல் பருமன் மற்றும் மனநல பாதிப்பு ஆகிய இரண்டு பாதிப்புகளில் இருந்து மக்களைக் காக்க ஒரு விரிவான திட்டத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவே கருதுகிறேன்.மருத்துவக் காப்பீட்டுக்கும், உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் ஆபரேஷன் தியேட்டரில் பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்களுக்கும் ஜிஎஸ்டி வரி விதிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தனியார் நடத்தும் மருத்துவமனைகள் மீது விதிக்கப்படும் தவறான வரிகளால் நாட்டில் லட்சக்கணக்கான மருத்துவமனைகள் தொடர்ந்து சிரமமின்றி இயங்க கஷ்டப்படுவதை ஒரு மருத்துவராக இந்த அரசின் கவனத்துக்கு கொண்டுவருகிறேன்.

அறுவை சிகிச்சை மைய கருவிகள், ஸ்கேன் மெஷின், அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ள மருத்துவ உபகரணங்கள், குறைந்தது 25 படுக்கைகள், சுமார் 20 மருத்துவர்கள், 40 நர்ஸ்கள், நிர்வாகப் பிரிவு, கனக்குப் பிரிவு, பாதுகாப்பு பிரிவு ஊழியர்கள் என ஒரு முழுமையான மருத்துவமனையை நிர்வகிப்பது எளிதான காரியமல்ல. இந்த அத்தனை விஷயங்களுக்கும் 18 சதவீதம் முதல் 28 சதவீதம் வரை ஜிஎஸ்டி வரியை மருத்துவமனை நிர்வாகம் செலுத்துகிறது.

ஆனால், மருத்துவ சேவை என்பது விலக்கு அளிக்கப்பட்ட சேவை என்பதால் மருத்துவமனை நிர்வாகத்தால் ஜிஎஸ்டி வரியை வேறுவகையில் திரும்பப்பெற இயலவில்லை. மற்ற செலவுகளோடு சமன் செய்துகொள்ளவும் வழியில்லை. எனவே, ஏற்றுமதி சேவைகளுக்கு முழு வரிவிலக்கு அளிப்பது போல மருத்துவமனைகளுக்கும் ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். அல்லது அந்தத் தொகையை சட்டப் பூர்வமாக திரும்பப்பெற வழிவகை செய்ய வேண்டும்.

டாக்டர்களையும் மருத்துவமனைகளையும் நுகர்வோர் சட்டத்துக்குள் கொண்டுவந்துவிட்டு, அதே பிரிவில் மற்றவர்கள் அனுபவிக்கும் ஜிஎஸ்டி தொடர்பான சலுகைகளை டாக்டர்கள் அனுபவிக்கக் கூடாது என்று சொல்வது நியாயமற்றது. எனவே மருத்துவர்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் ஜிஎஸ்டி வரிவிதிப்பில் உரிய மாற்றங்களைச் செய்ய வேண்டும்,” என்று அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x