Published : 08 Aug 2024 06:39 PM
Last Updated : 08 Aug 2024 06:39 PM
குமுளி: முல்லை பெரியாறு அணையில் வெள்ள காலங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
முல்லை பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தற்போது தென்மேற்குப் பருவமழை வலுவடைந்துள்ளதால் அணையின் நீர்மட்டம் வெகுவாய் உயர்ந்து வருகிறது. இதனால் கடந்த 28-ம் தேதி 128 அடியாக இருந்த நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து இன்று (வியாழன்) 131.20 அடியை எட்டியுள்ளது.
மழைக்காலங்களில் அணையின் நீர்மட்டம் அதிகரிக்கும் போது பாதுகாப்பு முன்னேற்பாடுகளுக்காக அதிகாரிகள் அணையை ஆய்வு செய்வது வழக்கம். இதன்படி, பொதுப்பணித்துறையின் மதுரை மண்டல தலைமைப் பொறியாளர் எஸ்.ரமேஷ் தலைமையிலான அதிகாரிகள் இன்று பெரியாறு அணையில் ஆய்வு நடத்தினர்.
பிரதான அணை, பேபி அணை, உபரிநீர் வழிந்தோடிகள் மற்றும் சீஸ்மோகிராப், ஆக்சலோகிராப், மழைமானி, உள்ளிட்ட பல்வேறு கருவிகளின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் பொறியாளர் ஜே.சாம் இர்வின், கண்காணிப்புப் பொறியாளர் த.குமார், உதவி செயற்பொறியாளர் ராஜகோபால், உதவி பொறியாளர்கள் பார்த்திபன், பாலசேகரன், நவீன்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ''வெள்ளம் ஏற்பட்டால் அதிகப்படியான நீரை வெளியேற்றுவது அவசியம். ஆகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு கருவிகளின் செயல்பாடுகள், மதகுகளின் இயக்கம் குறித்து இன்று ஆய்வு செய்யப்பட்டது'' என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT