Last Updated : 08 Aug, 2024 05:26 PM

 

Published : 08 Aug 2024 05:26 PM
Last Updated : 08 Aug 2024 05:26 PM

“போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக இம்மாத இறுதியில் பேச்சுவார்த்தை” - அமைச்சர் சிவசங்கர்

அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

கடலூர்: போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, பணப்பலன் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக இம்மாத இறுதியில் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கடலூரில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.

2015-ம் ஆண்டு அரியலூர் மாவட்டம் சன்னாசிப்பேட்டை வெள்ளாற்று பகுதியில் நடைபெற்ற முற்றுகையிடும் போராட்டத்தில் அப்போதைய குன்னம் தொகுதி எம்எல்ஏ-வும் தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சருமான சிவசங்கர் கலந்து கொண்டார். அப்போது பிரச்சினை ஏற்பட்டு அது கலவரமாக மாறியது. இதில் 9 போலீஸார் காயமடைந்தனர். இது குறித்து கடலூர் மாவட்டம் ஆவினங்குடி போலீஸார் 37 பேர் மீது 8 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று வழக்கு விசாரணைக்காக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி ஜவகர், விசாரணையை வரும் 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார். பின்னர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிவசங்கர், “போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பணப்பலன் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக இம்மாத இறுதியில் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்” என்றார்.

தொடர்ந்து, 2026 தேர்தலுக்கு முன்பாக முதல்வர் ஸ்டாலினே ‘ஜெய்ஸ்ரீராம்' சொல்வார் என பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது குறித்து அவரிடம் கேட்டதற்கு, “பாரதப் பிரதமர் நரேந்திர மோடியே இதுவரை கூறிவந்த ஜெய் ஸ்ரீ ராம் என ராமரை கைவிட்டு கட்சி மாறி ஜெய் ஜெகநாத் என கூற ஆரம்பித்துவிட்டார். எனவே, பாஜக தலைவர் அண்ணாமலை அப்டேட் ஆகட்டும் அதன் பிறகு பார்க்கலாம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x