Last Updated : 08 Aug, 2024 05:22 PM

 

Published : 08 Aug 2024 05:22 PM
Last Updated : 08 Aug 2024 05:22 PM

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50% இடங்களை பெறாத புதுச்சேரி அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: தேசிய மருத்துவக் கவுன்சில் அறிவுறுத்தலின்படி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை இதுநாள் வரையிலும் பெறாத புதுச்சேரி மாநில அரசைக் கண்டித்தும், இந்தாண்டில் இருந்து 50 சதவீத மருத்துவ இடங்களைப் பெற வேண்டும் என வலியுறுத்தியும் அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அண்ணாசிலை அருகே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநில அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது: "புதுச்சேரியை ஆளும் எந்த அரசாக இருந்தாலும் மருத்துவக் கல்வியில் அரசின் இடஒதுக்கீட்டை பெறுவதில் வியாபார நோக்கத்தோடு செயல்பட்டு வருகின்றன.

கடந்த 25 ஆண்டுகளாக நடைபெற்ற அனைத்து சட்டப்பேரவை, மக்களவை தேர்தல்களிலும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசுக்கான 50 சதவீத ஒதுக்கீட்டு இடங்களை பெறுவோம் என வாக்குறுதி அளித்துவிட்டு வெற்றி பெற்றவுடன் 50 சதவீத இடங்களுக்கு பதிலாக குறைந்த அளவிலான இடங்களை ஆட்சியாளர்கள் பெற்று வருகின்றனர்.

புதுச்சேரி மாநிலத்தில் இயங்கும் 4 நிகர்நிலை மருத்துவ பல்கலைக்கழகங்கள் மூலம் எந்தவிதமான நன்மையும் நம் மாநிலத்துக்கு இல்லை. நம் மாநிலத்தின் தண்ணீர், மின்சாரம், நிலம் ஆகியவற்றை பயன்படுத்துவார்கள். தேர்தல் நேரத்தில் அவ்வப்போது இருக்கும் ஆட்சியாளர்களுக்கு தேர்தல் நிதி வழங்குவார்கள். இந்த நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் ஆரம்பிக்கும் போது 50 சதவீத இடங்களை அரசுக்கு அளிப்போம் என உறுதிமொழி அளிக்கப்பட்டது.

கடந்த 2019ம் ஆண்டில் மத்திய மருத்துவக் கவுன்சில் நிகர்நிலை பல்கலைக் கழகங்களில் 50 சதவீத இடங்களுக்கு அரசு நிர்ணயம் செய்யும் கட்டணத்தை மட்டும் வசூலிக்க வேண்டும் என ஆணையிட்டது. ஆனால் இதையும் செயல்படுத்த அரசு அக்கறை எடுக்கவில்லை. நம் மாநிலத்தில் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் தவிர்த்து மூன்று தனியார் மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இந்த மூன்று மருத்துவ கல்லூரிகளிலும் மொத்தம் 650 இடங்கள் உள்ளன.

தேசிய மருத்துவ கவுன்சில் ஆணைப்படி 50 சதவீதமான 325 இடங்களை அரசு பெற்றிருக்க வேண்டும். ஆனால், ஆண்டுதோறும் மனம் போன போக்கில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் 30 சதவீதம், 32 சதவீதம், 35 சதவீதம் என நமக்கு பிச்சை போடுவது போல் சீட்டுகளை வழங்குகிறார்கள். கடந்த ஆண்டு 239 இடங்கள் சுமார் 36 சதவீதம் மட்டும் அரசின் இடஒதுக்கீடாக தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து அரசு மன்றாடி பெற்றது.

50 சதவீதம் பெற உரிய சட்டம் இயற்றாமல் ஆண்டுதோறும் கட்டப் பஞ்சாயத்து பேசுவது போல் தனியார் மருத்துவ உரிமையாளர்களிடம் அரசு பேரம் பேச வேண்டிய அவசியம் என்ன? தற்போது நம் மாநிலத்துக்கு புதியதாக ஒரு துணை நிலை ஆளுநர் வந்துள்ளார். அவர், இதற்கு முன்பு தலைமை செயலாளராக பணிபுரிந்துள்ளார். அவர் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் தனது நிர்வாகத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்துபவராக இருப்பார் என நம்புகிறோம்.

இவ்வாண்டு தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசின் இடங்களாக பெற அதிமுக சார்பில் தலைமையின் அனுமதி பெற்று துணைநிலை ஆளுநரை சந்தித்து மனு அளிக்கப்படும். தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர 7.5 சதவீத உள் ஒதுக்கீடு உள்ளது. அதுபோல் 6ம் வகுப்பில் இருந்து 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் அரசின் உள்ஒதுக்கீடு பெற தகுதி உடையவர் என திருத்த அரசாணையை புதுச்சேரி முதல்வர் வெளியிட வேண்டும்" என்று அன்பழகன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x