Published : 08 Aug 2024 01:55 PM
Last Updated : 08 Aug 2024 01:55 PM
சென்னை: ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்களை நடத்த ஊரக வளர்ச்சி இயக்குநர் பா.பொன்னையா அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் 12,525 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் ஆண்டுதோறும் குடியரசு தினம், சுதந்திர தினம், மேதினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட 6 நாட்களில் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆக.15-ம் தேதி கிராம சபைக் கூட்டத்தை நடத்த அறிவுறுத்துவதுடன், அதற்கான வழிகாட்டுதல்களையும் ஊரக வளர்ச்சி இயக்குநர் பா.பொன்னையா வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் மாவட்ட ஆட்சியர்களுக்கு இன்று அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினமான ஆக.15-ம் தேதி குறைவெண் வரம்பின்படி உறுப்பினர்கள் வருகை இருப்பதை உறுதி செய்து கிராமசபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் காலை 11 மணிக்கு கூட்டத்தை நடத்தப்பட வேண்டும். கிராம சபை நடத்துவது குறித்து பதிவு செய்ய கைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்தி நிகழ்நேர கிராம சபைக்கூட்ட நிகழ்வுகளை உள்ளீடு செய்ய வேண்டும்.
மக்களுக்கு கிராமசபைக் கூட்டம் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும். இக்கூட்டத்தில் கடந்த ஏப்.1 முதல் ஜூலை 31-ம் தேதி வரையுள்ள காலத்தில் ஊராட்சியின் பொது நிதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட செலவு அறிக்கையை படித்து ஒப்புதல் பெற வேண்டும். கடந்தாண்டுக்கான தணிக்கை அறிக்கையை கிராமசபையின் பார்வைக்கு வைத்து ஒப்புதல் பெற வேண்டும்.
தூய்மையான குடிநீர் விநியோகம் குறித்தும், இணைய வழியாக வரி செலுத்தும் சேவை, இணைய வழியாக மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி, சுயசான்று அடிப்படையில் கட்டிடங்களுக்கு உடனடி பதிவு மூலம் அனுமதியளித்தல் ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும். மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் முன்னேற்ற அறிக்கை குறித்தும், தூய்மை பாரத இயக்கப்பணிகள், ஜல்ஜீவன் இயக்கப்பணிகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டும்.” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT