Published : 07 Aug 2024 05:23 PM
Last Updated : 07 Aug 2024 05:23 PM
மதுரை: மாஞ்சோலை தொழிலாளர்களிடம் முன் ஓய்வு ஆவணங்களில் கட்டாய கையெழுத்து பெறப்படுவதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் புகார் தெரிவிக்கப்பட்டது.
மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை அரசு ஏற்று நடத்தக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பலர் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் டான்டீ நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. இதனால் மாஞ்சோலையை தேயிலை தோட்டத்தை ஏற்று நடத்த முடியாது என டான்டீ நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை டான்டீ நிறுவனத்திடம் ஒப்படைக்க முடியாது என வனத்துறையும் தெரிவித்தது. இதையடுத்து மாஞ்சோலை தொழிலாளர்களை வெளியேற்ற உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
இந்நிலையில், இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், “மாஞ்சோலை பகுதி மக்களை பார்க்கச் செல்லும் வழக்கறிஞர்களை அனுமதிப்பதில்லை. மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி ஓய்வு பெறும் ஆவணங்களில் கையெழுத்து பெறப்படுகிறது” எனக் கூறப்பட்டது.
பிபிடிசி நிறுவன வழக்கறிஞர் வாதிடுகையில், “மாஞ்சோலையில் 534 தொழிலாளர்கள் முன்கூட்டிய ஓய்வை ஏற்றுக்கொண்டுள்ளனர். முன்கூட்டிய ஓய்வை ஏற்பதும், ஏற்காததும் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களின் விருப்பத்துக்கு உட்பட்டது. ஏற்கெனவே 25 சதவீத தொகை வழங்கப்பட்டு விட்ட நிலையில், மீதத்தொகை நீதிமன்ற அறிவுறுத்தலின் பெயரில் நாகர்கோவில் தொழிலாளர் நலத்துறை உதவி இயக்குநரிடம் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், விசாரணையை ஆகஸ்ட் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்து, அன்றைய தினம் அனைத்துத் தரப்பினரும் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதங்களை முன்வைக்கலாம் என்று உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...