Last Updated : 07 Aug, 2024 05:37 PM

28  

Published : 07 Aug 2024 05:37 PM
Last Updated : 07 Aug 2024 05:37 PM

“வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதை இண்டியா கூட்டணி வேடிக்கை பார்க்கிறது” - வானதி சீனிவாசன்

வானதி சீனிவாசன் | கோப்புப்படம்

கோவை: “பாலஸ்தீன முஸ்லிம்களுக்காக போராடிய 'இண்டியா' கூட்டணி கட்சிகள், வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதை வேடிக்கை பார்க்கின்றனர்,” என பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கதேச நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி, பெரும் கலவரம் காரணமாக, அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு, நாட்டை விட்டு வெளியேறியிருக்கிறார். அவர் தற்காலிகமாக இந்தியாவில் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளார். வங்கதேசம் இன்று தனி நாடாக இருந்தாலும், 1947-க்கு முன்பு வரை இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருந்தது. இந்தியாவை பிளவுபடுத்த நினைத்த ஆங்கிலேயர்கள், முதலில் வங்கத்தைத் தான் பிரித்தார்கள். அப்படி பிரிக்கப்பட்ட ஒரு பகுதியான மேற்கு வங்கம் நம்மிடம் உள்ளது. கிழக்கு வங்கம் பாகிஸ்தானோடு இணைக்கப்பட்டது. பின் அது வங்கதேசம் என்ற தனி நாடானது.

பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததுடன் நாட்டை விட்டே ஷேக் ஹசீனா வெளியேறியிருக்கிறார். ஆனாலும், அங்கு கலவரங்கள் ஓயவில்லை. இப்போது அங்கு வசிக்கும் ஒரு கோடிக்கும் அதிகமான இந்துக்களை குறிவைத்து வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்து கோயில்கள், இந்துக்களின் சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன. பல்வேறு கோயில்கள் எரிக்கப்பட்டுள்ளன. இஸ்கான் கோயில் தாக்கப்பட்டு, அங்குள்ள 'பகவத் கீதை' உள்ளிட்ட புனித நூல்கள் எரிக்கப்பட்ட காட்சி கண்ணீரை வரவழைக்கிறது. வங்கதேச நாட்டில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் காரணமாக, பாலஸ்தீனத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றதும், இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகள் குறிப்பாக, திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனக் குரல் எழுப்பினார்கள். ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று இன்று வரை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், வங்கதேசத்தில் மண்ணின் மைந்தர்களான இந்துக்கள் தாக்கப்படுவது குறித்தும், அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் எரிக்கப்படுவது குறித்தும், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் மவுனம் சாதிக்கின்றன.

இந்துக்களின் உயிரும் உடைமைகளும் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரிவதில்லை. திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கு, இப்போது வங்கதேச இந்துக்களுக்காக குரல் கொடுக்க மனமில்லை.காங்கிரஸ், திமுக கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட 'இண்டியா' கூட்டணி கட்சிகளின் இரட்டை நிலைப்பாட்டை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு கண்ணுக்கு வெண்ணெய், மற்றொரு கண்ணுக்கு சுண்ணாம்பு வைப்பது தான் 'இண்டியா' கூட்டணி கட்சிகளின் பாரம்பரியம்,” என்று அதில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x