Published : 07 Aug 2024 03:43 PM
Last Updated : 07 Aug 2024 03:43 PM
புதுடெல்லி: மாநிலங்களுக்கு நிதி வழங்காமல் வஞ்சித்தால் இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து ஏற்படும் என மக்களவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிகுமார் எச்சரித்துள்ளார். மக்களவையில் நிதியமைச்சக கோரிக்கை மீதான விவாதத்தில் பேசியபோது அவர் இதனை தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நிதி மசோதா மீதான விவாதத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமார் பங்கேற்று பேசியது: "மாநிலங்களுக்கு நிதியைப் பகிரும்போது எவ்வளவு சதவீதம் பகிர வேண்டும் என்பதை நிதி ஆணையம் முடிவு செய்கிறது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு நிதியைப் பகிர்கிறது. 13-வது நிதி ஆணையத்தின் சார்பில் ஆண்டுக்கு 32 சதவீதம் மாநிலங்களுக்கு நிதி பகிரப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. ஆனால், 31.1 சதவீதம் தான் மாநிலங்களுக்கு நிதி பகிர்ந்து அளிக்கப்பட்டது.
தொடர்ந்து நிதி பகிர்வில் ஏமாற்றம்: 14-வது நிதி ஆணையத்தில் 42 சதவீதம் நிதியைப் பகிர்வது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் 41.5 சதவீதம்தான் நிதி பகிர்ந்து அளிக்கப்பட்டது. தற்போது நடைமுறையில் உள்ள 15-வது நிதி ஆணையம் மாநிலங்களுக்கு 41 சதவீதம் நிதியைப் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தது. ஆனால் இதுவரையிலான ஆண்டுகளில் 40.1 சதவீதம் மட்டுமே மாநிலங்களுக்கு நிதி பகிர்ந்து அளிக்கப்படுகிறது. இந்த 15-வது நிதி ஆணைய காலத்தில் மட்டும் ரூ.1.2 லட்சம் கோடி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்காமல் மத்திய அரசால் ஏமாற்றப்பட்டு இருக்கிறது.
இப்படி நிதியை குறைவாக பகிர்ந்தளிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும். 15-வது நிதி ஆணைய காலத்தில் பகிரப்படாமல் எஞ்சி இருக்கும் அந்த ரூ.1.2 லட்சம் கோடியை எஞ்சியுள்ள காலத்துக்குள் மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்க வேண்டும்.
செஸ் வரியை கணக்கில் கொள்ள வேண்டும்: மாநிலங்களுக்கு வரி வருவாயைப் பகிரும்போது அதில் செஸ், சர்ச் சார்ஜ் ஆகியவற்றை சேர்ப்பதில்லை. செஸ், சர்ச் சார்ஜ் என ஏராளமான தொகையை மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் வசூலிக்கிறது. அதிலும் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த செஸ், சர்ச் சார்ஜ் மூலம் வசூலிக்கப்படும் தொகை கூடிக் கொண்டே போகிறது.
கடந்த 2014 -15-ல் ரூ.1.19 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டது. தற்போது 2023- 24-ல் ரூ.5.10 லட்சம் கோடி வசூலிக்கப்பட்டு இருக்கிறது. இதில் மாநிலங்களுக்கு எதுவுமே கொடுப்பதில்லை. அடுத்து 16-வது நிதி ஆணைய காலம் துவங்க இருக்கிறது. மாநிலங்களுக்கு நிதி பகிர்வு தொடர்பாக முடிவெடுக்கும் போது செஸ், சர்ச் சார்ஜ் ஆகியவற்றிலும் மாநிலங்களுக்குப் பங்கு வழங்க வேண்டும் என்று அதில் முடிவு எடுக்க நான் வலியுறுத்துகிறேன்.
மாநிலங்களுக்கு உரிய அளவில் நிதியைக் கொடுத்தால்தான் அவை நிம்மதியாக செயல்பட முடியும். கடந்த ஜூலை 25ஆம் தேதி உச்ச நீதிமன்றம் மினரல் ஏரியா டெவலப்மெண்ட் அத்தாரிட்டி மற்றும் பிறர் என்ற வழக்கில் மிக முக்கியமான ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து: நிதி கூட்டாட்சி ’Fiscal Federalism’ என்பது பாதுகாக்கப்பட வேண்டும் என்று விரிவாக உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது. அதை மத்திய அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். நிதி கூட்டாட்சி காப்பாற்றப்பட்டால்தான் இந்தியாவின் ஒருமைப்பாடு பாதுகாக்கப்படும். தொடர்ந்து மாநிலங்களை வஞ்சித்தால் அது பாதிக்கப்படுகிற மக்களை கிளர்ந்து எழச்செய்து விடும். அதன் பிறகு இந்தியாவின் ஒருமைப்பாடு ஆபத்துக்குள்ளாகும் என்பதை நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். எனவே நிதி கூட்டாட்சியைப் பாதுகாப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கர்ப்பப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி: இந்த நிதிநிலை அறிக்கையில் கர்ப்பப்பை வாய்புற்றுநோயைத் தடுப்பதற்கான தடுப்பூசித் திட்டம் குறித்த அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்தேன். உலகிலேயே இந்தவகைப் புற்றுநோயால் அதிகமான பெண்கள் உயிரிழப்பது இந்தியாவில் தான். ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் பேர் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த 17-வது நாடாளுமன்றத்தில் இது குறித்து நான் கேள்வி எழுப்பி அந்த விவரங்களை பதிலாகப் பெற்றிருக்கிறேன்.
முன்பு இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை, இப்போது தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அது இந்தியாவிலேயே கோவிட் தடுப்பூசியை உற்பத்தி செய்த அதே பூனாவாலா நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படுகிறது. அந்தத் தடுப்பூசியை நம்முடைய இலவச தடுப்பூசி திட்டத்தின் கீழ் சேர்க்க வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இடைக்கால பட்ஜெட்டில் அது குறித்து சொல்லப்பட்டிருந்தது, அதை பரிசீலிப்போம் என்று கூறியிருந்தார்கள்.
ஆனால் இந்த பட்ஜெட்டில் அதைப் பற்றி எதுவுமே சொல்லப்படவில்லை. இந்த ஹெச்பிவி தடுப்பு ஊசியை இலவசத் தடுப்பூசித் திட்டத்தில் சேர்த்து இந்த புற்றுநோயால் பெண்கள் உயிரிழக்காமல் தடுக்க வேண்டும் என்று நான் மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
ஜூவல்லரி பார்க்: நம்முடைய நிதி அமைச்சர் ஆரம்பக் கல்வி பெற்றது என்னுடைய தொகுதியான விழுப்புரத்தில் தான். அதனால் அந்தத் தொகுதி மீது அவருக்கு மிகுந்த அன்பு உண்டு. 2019-ம் ஆண்டு அவரை சந்தித்து நான் கோரிக்கை வைத்தேன். விழுப்புரத்தில் நகை செய்யும் தொழிலாளிகள் ஏராளமாக இருக்கிறார்கள், அவர்களுக்காக ஜூவல்லரி பார்க் ஒன்றை அமைத்துத் தர வேண்டும் என்று கேட்டேன். நிச்சயம் செய்கிறேன் என்று வாக்குறுதி அளித்தார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் அது நிறைவேற்றப்படவில்லை. இப்போதாவது அதை பரிசீலித்து விழுப்புரத்தில் ஜூவல்லரி பார்க் ஒன்றை அமைத்து தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று ரவிக்குமார் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT