Published : 07 Aug 2024 02:57 PM
Last Updated : 07 Aug 2024 02:57 PM
சென்னை: ‘தி கோட்’ திரைப்பட புரமோஷனுக்காக கட்சி பெயரை பயன்படுத்தக்கூடாது என விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவரும், நடிகருமான விஜய் உத்தரவிட்டுள்ளார்.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். கட்சியை தொடங்கிய உடனேயே, கட்சி பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த அவர், கட்சியில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்து நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டு, முதல் உறுப்பினராகவும் நடிகராக தனது பெயரை கட்சியில் பதிவு செய்து கொண்டார். இதையடுத்து, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், தமிழக வெற்றிக் கழகம் பெயரில், தொடர்ச்சியாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.
மேலும், கட்சியில் யாருக்கெல்லாம், எந்த பதவிகளை வழங்குவது என்பது குறித்து ஆலோசனை நடத்தி வரும் விஜய், அடுத்த மாதம் பிரம்மாண்ட மாநாடு நடத்தவும் திட்டமிட்டுள்ளார். தற்போது மாநாடு நடத்துவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. திருச்சியில் மாநாடு நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், அரசியல் தலையீட்டால், மாநாட்டை திருச்சியில் நடத்துவது கேள்விக்குறியாகி உள்ளது.
இந்த சூழ்நிலையில், நடிகர் விஜய் தற்போது ‘தி கோட்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்போது வரை அந்த படத்தில் 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அடுத்த மாதம் 5ம் தேதி ‘தி கோட்’ படம் திரைக்கு வரவிருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரமோஷன் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘தி கோட்’ பட ப்ரமோஷன் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், அதே நேரத்தில் படத்தின் ப்ரமோஷனுக்காக தமிழக வெற்றிக் கழகம் பெயரை பயன்படுத்தக் கூடாது எனவும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கும், ரசிகர்களுக்கும் நடிகர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவையடுத்து ‘தி கோட்’ படத்தின் ப்ரமோஷன் பணிகளில் நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். முக்கியமாக, படத்துக்காக தயாரிக்கப்படும் பேனர்களில், தமிழக வெற்றிக் கழகம் பெயரை தவிர்த்து, தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரையே நிர்வாகிகள் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT