Published : 07 Aug 2024 12:44 PM
Last Updated : 07 Aug 2024 12:44 PM

பேரிடர்களை தாங்கும் வேளாண்மையை வடிவமைத்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன்: சென்னையில் ஒடிசா துணை முதல்வர் புகழாரம்

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை அரங்கில் இடம்பெற்ற கண்காட்சியை பார்வையிடுகிறார் ஒடிசா மாநில துணை முதல்வர் கனக் வர்தன் சிங் தேவ். உடன் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவர் சௌமியா சுவாமிநாதன் உள்ளிட்டோர். | படம்: ச.கார்த்திகேயன்

சென்னை: ஒடிசா மாநிலத்தில் பேரிடரை தாங்கும் வேளாண்மையை வடிவமைத்தவர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் என்று அம்மாநில துணை முதல்வர் கனக் வர்தன் சிங் தேவ் தெரிவித்துள்ளார்.

எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில், எம்.எஸ்.சுவாமிநாதனின் 99-வது பிறந்த நாளை ஒட்டி 'பசி இல்லாத உலகம்' என்ற தலைப்பிலான பன்னாட்டு கருத்தரங்கம் சென்னை தரமணியில் உள்ள அறக்கட்டளை அரங்கில் இன்று நடைபெற்றது. இதில், ஒடிசா மாநில துணை முதல்வர் கனக் வர்தன் சிங் தேவ் பங்கேற்று, அறக்கட்டளையின் இலட்சியினையை வெளியிட்டார்.

தொடர்ந்து, அறக்கட்டளையின் நடவடிக்கைகளால் உருவான மாற்றங்கள் குறித்த அறிக்கை மற்றும் அறக்கட்டளை சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஊட்டச்சத்து விழிப்புணர்வு தொடர்பான அறிக்கைகளையும் வெளியிட்டார். பின்னர் அவர் நிகழ்ச்சியில் பேசியது: ''ஒடிசா மாநிலம் எப்போதும் புயல், பெருவெள்ளம், வறட்சி என பேரிடர்களால் பாதிக்கும் மாநிலமாக உள்ளது. இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், எம்.எஸ்.சுவாமிநாதன் ஒடிசா மாநிலத்தில் பேரிடர்களை எதிர்கொள்ளும் வகையில் வேளாண்மை திட்டங்களை வகுத்து செயல்படுத்த அறிவுறுத்தினார்.

அதை செயல்படுத்தியதன் மூலம் பேரிடர்களால் வேளாண்மையில் ஏற்படும் பாதிப்புகள் குறைந்துள்ளன. அவர் பேரிடரால் பாதிக்காத வகையில் சிறுதானியங்கள், பயறு வகை பயிர்கள், எண்ணெய் வித்துப் பயிர்கள் போன்றவற்றை பயிரிட அறிவுறுத்தினார். இதன் மூலம் விவசாயிகள், பழங்குடி மக்களின் வாழ்வாதாரம் மேம்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியும் சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். நடப்பாண்டு பட்ஜெட்டில் கூட வேளாண்மைக்கு கடந்த ஆண்டு விட 36 சதவீதம் அதிக நிதி ஒதுக்கி உள்ளார். இதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும்'' என்று அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய தி இந்து குழும இயக்குநர் என்.ராம், ''விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிப்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணைய அறிக்கையை மத்திய அரசு இதுவரை செயல்படுத்தாதது வருத்தம் அளிக்கிறது. இதன் மூலம் மத்திய அரசு தனது கடமையை தவறி இருக்கிறது'' என்றார்.

இந்நிகழ்ச்சியில் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், கர்நாடக மாநில வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா, நபார்டு வங்கி தலைவர் கே.வி.சாஜி, எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை தலைவர் சௌமியா சுவாமிநாதன், செயல் இயக்குநர் ஜி.என்.ஹரிஹரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x