Published : 07 Aug 2024 06:38 AM
Last Updated : 07 Aug 2024 06:38 AM

இலவச வேட்டி, சேலை, பள்ளி சீருடைகள் உரிய நேரத்தில் விநியோகம் செய்யப்படுகிறது: பழனிசாமிக்கு அமைச்சர் காந்தி பதில்

அமைச்சர் ஆர்.காந்தி

சென்னை: மாணவர்களுக்கான சீருடை, பொங்கலுக்கான இலவச வேட்டி,சேலை உரிய நேரத்தில் வழங்கப்படுவதாகவும், உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட வேண்டாம் என்றும் எதிர்க் கட்சித்தலைவர் பழனிசாமிக்கு அமைச்சர் ஆர்.காந்தி பதிலளித்துள்ளார்.

இலவச வேட்டி சேலை திட்டம் மற்றும் மாணவர்களுக்கு நான்கு இணை இலவச சீருடைகள் வழங்கும் திட்டங்களில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார். இவற்றுக்கு பதிலளித்து கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வெளியிட்ட அறிக்கை:

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 4இணை சீருடைகள் வழங்கப்படுகின்றன. 2024-25-ம் கல்வியாண்டுக்கு சீருடை வழங்கும் திட்டத்துக்கு இதுவரை முன்பணமாகரூ.250 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு இத்திட்டத்துக்கு சமூக நல ஆணையரின் கடிதப்படி 2 இணை சீருடைக்கு தேவையான துணி விவரங்கள் வழங்கப்பட்டு, 237.98 லட்சம் மீட்டர் முழுவதுமாக உற்பத்தி செய்யப்பட்டு மாவட்டங்களில் உள்ள துணி வெட்டும் மையங்களுக்கு கடந்த ஜூன் மாதம் அனுப்பப்பட்டுள்ளது. சீருடை தைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும் 3-வது இணைக்கான துணி உற்பத்தி முடிந்து, 4-வது இணைக்கு முடியும் தருவாயில் உள்ளது.

எனினும், துணி வெட்டும் மையங்களில் இடப்பற்றாக்குறையால் 4 இணை சீருடை துணிகளை கையாள முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தேவையின் அடிப்படையில், சீருடை துணிகள் சமூக நலத்துறைக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படும். தொய்வின்றி சீருடை வழங்கும் பணி நடைபெறுகிறது.

இந்த அரசின் செயல்பாட்டை ஒப்பு நோக்கும்போது, கடந்த அரசுகுறிப்பிட்ட காலத்துக்குள் சீருடைதுணிகள், இலவச வேட்டி சேலைகளையும் வழங்கியதில்லை.

கடந்த ஆட்சியில், இலவச வேட்டி, சேலை பொங்கல் பண்டிகைக்கு முன்னர் முழுமையாக பயனாளிகளுக்கு வழங்கப்பட்டதில்லை. பெரும்பாலும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக, 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதமும், 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதமும் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த அரசில், இந்தாண்டு பொங்கலுக்கான வேட்டி சேலைகள் கடந்தாண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்னரே அனுப்பப்பட்டு, பொங்கலுக்கு முன்னரே விநியோகிக்கப்பட்டது. அடுத்தாண்டுக்கான திட்டத்தை செம்மையாக செயல்படுத்த ஆய்வுகள் நடத்தப்பட்டு, அரசாணை வெளியிடும் நிலையில்உள்ளது. நடப்பாண்டிலும் பொங்கலுக்கு முன் பொதுமக்களுக்கு வேட்டி, சேலைகள் விநியோகிக்கப்படும்.

எனவே உண்மைக்கு புறம்பானஅடிப்படை ஆதாரமற்ற வதந்திகளை பரப்பும் நோக்கமுடன் செய்திகளை வெளியிடுவது பொறுப்பான அரசியல் தலைவருக்கு அழகல்ல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x