Last Updated : 06 Aug, 2024 07:14 PM

 

Published : 06 Aug 2024 07:14 PM
Last Updated : 06 Aug 2024 07:14 PM

தமிழக மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை தேவை: மக்களவையில் கனிமொழி வலியுறுத்தல்

கனிமொழி எம்பி

புதுடெல்லி: நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரான கனிமொழி எம்பி இன்று தமிழக மீனவர்கள் பிரச்சினையை மக்களவையில் எழுப்பினார். அதில், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தினார்.

இது குறித்து இன்று மக்களவையில் கேள்வி நேரத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி கருணாநிதி பேசியது: “இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களின் படகுகளைக் கைப்பற்றியது மட்டும் இல்லை. இந்த ஆண்டு மட்டுமே 27 படகுகள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு இருக்கின்றன. சுமார் 177 இந்தியப் படகுகள் இப்போது இலங்கை அரசிடம் கைவசம் இருக்கின்றன. அந்தப் படகுகள் தேசியமயமாக்கப்பட்டிருக்கின்றன. அந்தப் படகுகள் அவர்களுடையதாக உரிமை எனக் கொண்டாடப்படுகின்றன.

அந்தப் படகுகள் இந்திய மீனவர்களுக்குக் கிடைப்பதற்கான வாய்ப்பே இல்லை. மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட பிறகும் கூட, படகுகள் விடுவிக்கப்படவில்லை. தூத்துக்குடி தருவைகுளத்தில் இரண்டு படகுகளில் சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கியுள்ளனர், 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டு நேற்று இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த அரசு இது குறித்து கவனத்தை எழுப்பிய பிறகும் இது நடந்திருக்கிறது. எனவே, இந்தப் பிரச்சினையில் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாகாமல் இருக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x