Published : 06 Aug 2024 06:38 PM
Last Updated : 06 Aug 2024 06:38 PM
புதுடெல்லி: ஜிஎஸ்டி வரி வருவாயில் 60 சதவீத வருவாய் மாநிலங்களுக்கு வழங்க அதன் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என மக்களவையில் திமுக எம்பி கதிர் ஆனந்த் வலியுறுத்தி பேசினார்.
இது குறித்து வேலூர் தொகுதி எம்பியான கதிர் ஆனந்த் விதி 377 கீழ் பேசியது: “ஜூலை 2017 முதல் ஜிஎஸ்டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டது. ஜிஎஸ்டியில் உள்ள சிக்கல்களால் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தங்கள் அதிகார வரம்புக்குள் இருந்த சாத்தியமான வரி வருமானத்தை இழக்கின்றன. நாடு முழுவதும் உள்ள பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பொதுவான வரி விகிதத்தை முன்மொழிந்ததால், பல மாநிலங்கள் ஜிஎஸ்டியை எதிர்த்தன.
இதன் காரணமாக பல்வேறு பொருட்களின் மீதான வரி விகிதங்களை நிர்ணயிக்கும் அதிகாரத்தை மாநிலங்கள் இழக்க நேரிடும். இது நிதி தன்னாட்சி, கூட்டாட்சி தத்துவம் மற்றும் அவற்றின் சுயாட்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. மேலும், வரி கட்டமைப்பின் சிக்கலான தன்மை, எம்எஸ்எம்இ துறையினர் மீதான இணக்கச் சுமைகள், போலி விலைப்பட்டியல்களால் வருவாய் கசிவுகள் மற்றும் மோசடியான உள்ளீட்டு வரி கோரிக்கைகள் ஆகியவை ஜிஎஸ்டி அமலாக்கத்தின் முக்கிய சவால்கள் ஆகும்.
பரந்த வரி அடிப்படை மற்றும் மேம்படுத்தப்பட்ட இணக்கம் காரணமாக ஜிஎஸ்டியின் கீழ் மத்திய அரசின் வரி வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளது. ஐஜிஎஸ்டி மற்றும் செஸ் வசூல் மத்திய அரசின் வருவாயில் கூடுதலாக சேர்த்துள்ளன. தற்போதைய சூழ்நிலையில் ஜிஎஸ்டி என்பது, மாநிலங்களுக்கு எதிரான பாரபட்ச நிதி பகிர்வு ஆகும். தற்போது, எஸ்ஜிஎஸ்டி எனப்படும் 50 சதவிகித ஜிஎஸ்டி, மாநிலங்களின் வருவாய் விகிதத்தில் மாநிலங்களுக்கிடையே பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
சிஜிஎஸ்டி எனப்படும் மீதமுள்ள 50 சதவிகிதம், இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியின் ஒரு பகுதியாகும். சிஜிஎஸ்டி சட்டத்தின் பிரிவு 8, அனைத்து மாநிலங்களுக்கு இடையேயான பொருட்கள் மற்றும் சேவைகளின் மீதும் வரி விதிக்கப்படும். ஆனால், வரி விகிதம் ஒவ்வொன்றும் 14 சதவிகிதத்துக்கு மேல் இருக்க கூடாது என்பது விதி. ஜிஎஸ்டி வரி வருவாயில் 40 சதவிகிதத்தை மத்திய அரசுக்கும், 60 சதவிகிதத்தை மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கும் சட்ட திருத்தத்தை கொண்டுவர வேண்டும்.
இதன்மூலம், மட்டுமே மத்திய கருவூலத்தில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கு இழைக்கப்படும் அநீதி, அதிகபட்ச அலட்சியமும், சமமற்ற நிதிப்பகிர்வும் தவிர்க்கப்படும். மாநில அரசுகள், உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்த பல வழிகளில் தொழில்களை ஊக்குவிக்கிறது. ஆனால் ஜிஎஸ்டியால் அவர்களுக்கு ஈடாக எதுவும் கிடைக்காது. எனவே ஐஜிஎஸ்டியின் பகிர்வு முறை உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோர் மாநிலங்களுக்கு தலா 30 சதவிகிதம் மற்றும் யூனியன் அரசாங்கத்திற்கு 40 சதவிகிதம் என மாற்றப்படலாம்.
எனவே, ஒன்றிய அரசின் மத்திய கருவூலத்தில் இருந்து சமமான வருவாயைப் பகிர்ந்தளிக்க வேண்டும். இதற்கு மாநிலங்களுக்கும், மையத்துக்கும் இடையிலான ஜிஎஸ்டி வருவாயைப் பகிர்ந்து கொள்ளும் முறையில் மாற்றங்களை ஏற்படுத்துவது அவசியம். ஜிஎஸ்டியின் அந்தந்த சட்டங்களில் இதுபோன்ற பொருத்தமான திருத்தங்களைச் செய்யுமாறு மத்திய அரசை நான் வலியுறுத்துகிறேன்” என்றார் கதிர் ஆனந்த்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT