Published : 06 Aug 2024 12:11 PM
Last Updated : 06 Aug 2024 12:11 PM

தமிழக தொழில் துறையை படுபாதாளத்துக்கு தள்ளியுள்ளது திமுக அரசு - இபிஎஸ் சாடல்

எடப்பாடி பழனிசாமி

சென்னை: தமிழக ஜவுளி நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை இந்தியாவின் அண்டை மாநிலங்களுக்கு மடை மாற்றும் அளவிற்கு தமிழக தொழில் துறையை திமுக அரசு படுபாதாளத்திற்குத் தள்ளியுள்ளது என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஆட்சிக்கு வந்து 38 மாதங்களில் குடும்பத்துடன் ஐக்கிய அரபு நாடுகள் பயணம், பிறகு சிங்கப்பூர் சுற்றுப் பயணம்; 2024-ஆம் ஆண்டு ஜனவரி 7, 8 ஆகிய நாட்களில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு; பிறகு ஜனவரி 27-ல் ஸ்பெயினுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு அந்நிய முதலிடுகள் ஈர்ப்பில் தமிழகத்தை பின்னுக்கு தள்ளியதில்தான் இந்த திமுக அரசு சாதனை புரிந்துள்ளது.

குறிப்பாக, தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்கான அரசுமுறைப் பயணமாக 27.1.2024 அன்று ஸ்பெயினுக்குச் சென்றபோது 3,440 கோடி ரூபாய் முதலீட்டிற்கான உடன்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த நிலையில், உடன்பாடு ஏற்பட்டுள்ள ஒருசில நிறுவனங்களில், 2 நிறுவனங்களின் அலுவலகங்கள் சென்னை மற்றும் பெருந்துறையில் உள்ளன என்று செய்திகள் வந்துள்ளன.

ஜெயலலிதா ஆட்சியில் 2020-2021ல் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்த்தலில் 3-ஆவது இடத்தில் இருந்த தமிழகத்தை, 2022-23ல் 27.70 சதவீதம் குறைவாக அந்நிய முதலீட்டை ஈர்த்து, 8-ஆவது இடத்திற்கு பின்னுக்குத் தள்ளியதுதான் நிர்வாகத் திறனற்ற முதலமைச்சரின் சாதனை' என்று சரியாக ஓராண்டிற்கு முன், அதாவது ஆகஸ்ட் 2023 அன்று நான் அறிக்கை மற்றும் பேட்டிகள் வாயிலாக தெரிவித்திருந்தேன். இதுகுறித்து வெள்ளை அறிக்கையும் வெளியிட வேண்டும் என்று பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினை வலியுறுத்தி இருந்தேன். ஆனால், இதுவரை திமுக அரசு வெள்ளை அறிக்கை எதையும் வெளியிடவில்லை.

செமி கண்டக்டர் தயாரிப்பில் சீனா மற்றும் தைவான் நாடுகள் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள நிலையில், இந்தியாவில் செமி கண்டக்டர் தயாரிப்பதற்கான தொழிற்சாலைகள் அமைப்பதற்கான முன்னெடுப்புகளை மத்திய அரசு ஊக்குவித்தபோது, எனது தலைமையிலான அம்மாவின் அரசு திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரி மற்றும் ஒசூரில் செமி கண்டக்டர் பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கைளை மேற்கொண்டோம்.

ஆனால், ஆட்சிக்கு வந்து 38 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், விடியா திமுக அரசு இதில் முணைப்பு காட்டாததன் காரணமாக செமி கண்டக்டர் தொழிற்சாலைகள் அசாம் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களுக்குச் சென்றுவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நிர்வாகத் திறனற்ற திமுக அரசின் கையை விட்டு வெளிநாட்டு முதலீடுகள்தான் வெளி மாநிலங்களுக்குச் செல்கிறது என்ற நிலையில், கடந்த ஜூலை மாதம் கடைசி வாரத்தில் மத்தியப் பிரதேச முதலமைச்சர், கோவை மற்றும் திருப்பூருக்கு நேரடியாக வருகை தந்து, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் (TEA), தென்னிந்திய ஆலைகள் சங்கம் (SIMA) மற்றும் இந்திய பருத்தி கூட்டமைப்பு (ICF) ஆகியவற்றுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளார். இதனால், உள் மாநில ஜவுளி முதலீடுகள் வெளி மாநிலங்களுக்குச் செல்லும் நிலையை இந்த திமுக அரசு ஏற்படுத்தியுள்ளது.

மேற்படி ஒப்பந்தங்களின்படி, மத்தியப் பிரதேசத்தில் பருத்தி வளர்ச்சி வாரியத்தை நிறுவிடவும், எக்ஸ்ட்ரா லாங் ஸ்டேபிள் (ELS) பருத்தி உற்பத்தி மற்றும் பரப்பளவை அதிகரிக்கவும், மத்தியப் பிரதேசத்தின் ஆடைத் தொழிலுக்கான முதலீட்டு வாய்ப்புகளை ஊக்குவிப்பதோடு, ஆடை உற்பத்தி நிறுவனங்களின் வளர்ச்சியை எளிதாக்கவும், திறன் மேம்பாடு வசதிகளில் ஆலோசனை வழங்கவும், ஆடை கிளஸ்டர் வடிவமைப்பிற்கான ஊக்கம் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் SIMA மற்றும் ICF உடன் இணைந்து செயல்படும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழக ஜவுளி கூட்டமைப்பு தனது விரிவாக்கப் பணிகளை வெளி மாநிலங்களுக்கு மாற்றுவதற்கு ஒருசில முக்கியக் காரணங்கள் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். அதன் விபரம்:

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தொழில் நிறுவனங்களுக்கு மூன்று முறை கடுமையாக மின் கட்டணங்களை உயர்த்தியதுடன், பீக் ஹவர் கட்டண உயர்வு, நிலை கட்டணம் உயர்வு; 365 கிலோ பருத்தி பேலின் விலை 50 சதவீதத்திற்கும் கீழே குறைந்த போதும், நூல் விலையில் ஸ்திரமற்ற தன்மை நிலவிய போதும், போதிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது.

வெளிநாடுகளில் இருந்து முதலீட்டினை ஈர்க்கிறோம்' என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் நிர்வாகத் திறனற்ற விளம்பர திமுக அரசு, இனியாவது. கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழித்து, முதலில் தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்குச் செல்லும் தமிழக தொழில் நிறுவனங்கள், இங்கேயே தொழில் துவங்குவதற்குத் தேவையான சூழ்நிலையை உருவாக்குவதோடு; தென்னிந்தியாவின் மான்செஸ்டர் 'கோயம்புத்தூர்' என்ற பெயரை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளும் வகையில் டெக்ஸ்டைல் துறையினைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x