Published : 06 Aug 2024 11:04 AM
Last Updated : 06 Aug 2024 11:04 AM

வக்ப் சட்டத்தில் திருத்தம் | நாடாளுமன்றத்தில் மதச்சார்பற்ற கட்சிகள் எதிர்க்க ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

சென்னை: வக்ப் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டுவரவிருப்பதை இண்டியா கூட்டணியினர் உட்பட மதச்சார்பற்ற கட்சிகள் எதிர்க்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஜவாஹிருல்லா விடுத்துள்ள அறிக்கையில், "மத்திய பாஜக அரசு வக்ப் சட்டம் 1995ல் திருத்தங்கள் மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் கசிந்துள்ளன. முஸ்லிம் தனவந்தர்கள் சமூக நலனுக்காக அர்ப்பணித்துள்ள சொத்துகளே வக்ப் சொத்துகள் என அழைக்கப்படுகின்றன. வக்ப் சொத்துகளைக் கண்காணித்து மேலாண்மை செய்வதற்காக இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு காலத்தில் 1954ல் வக்ப் சட்டம் இயற்றப்பட்டது. இதன் பின் மத்திய வக்ப் வாரியமும் மாநில வக்ப் வாரியங்களும் உருவாக்கப்பட்டன.

வக்ப் வாரியச் சட்டத்தில் 40 வகையான திருத்தங்களை மோடி அரசு மேற்கொள்ளவிருப்பதாகச் செய்திகள் இப்போது ஊடகங்களில் கசியவிடப்பட்டுள்ளன. இந்த திருத்தங்கள் எந்த வகையானவை என்பது குறித்த விபரங்கள் வெளிவரவில்லை. இருப்பினும் வக்ப் வாரியங்களின் செயல்பாடுகளை முடக்கி வக்ப் சொத்துகளைத் தன்வயப்படுத்தும் தீய நோக்கத்துடன் இச்சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.

வக்பு வாரியம் எந்த ஒரு சொத்தையும் தனது சொத்து என்று அறிவிக்கலாம் என்று தவறான கருத்து பரப்பப்படுகிறது. ஒரு மாநிலத்தில் உள்ள வக்பு சொத்துகளை நில ஆய்வு செய்து அடையாளம் காணும் பொறுப்பு மாநில அரசின் வருவாய்த் துறைக்கே இருக்கின்றது.

வக்ப் வாரியத்தின் தலைமை செயல் அலுவலராக செயல்படுபவர் மாநில அரசின் நியமிக்கப்படும் அரசு அலுவலர் தான். வக்ப் வாரியத்தில் பெண்கள் உறுப்பினர்களாகவும் வாரியத்தின் தலைவர்களாகவும் செயல்பட்டு வருகிறார்கள். எனவே பெண்களை உறுப்பினர்களாக நியமிப்பதற்காக இந்த திருத்தம் எனச் செல்லப்படுவதிலும் நியாயமில்லை.

மோடி அரசு ஏற்கனவே மிகவும் சிறுபான்மையினரான ஆங்கிலோ இந்தியர்களுக்கு இருந்த உரிமைகளைப் பறித்தது. தற்போது ரயில்வே இராணுவத்திற்கு அடுத்த அதிகமாக நிலப்பரப்புள்ள சொத்துகளைப் பறிக்கும் நோக்கத்தில் இந்தத் திருத்தங்களைக் கொண்டு வர முயல்கின்றது. ஏற்கெனவே பல மாநிலங்களில் கனிசமான வக்ப் சொத்துகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இவற்றில் பல அரசு அலுவலகங்களாக, இன்னபிற அரசு பயன்பாட்டிலிருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் மத்திய வர்க்கத்தினருக்குப் பெரும் ஏமாற்றமே இருந்தது. இந்த நிலையில் மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் ஜார்க்கண்டில் சட்டமன்றத் தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ள சூழலில் முஸ்லிம் வெறுப்பை மூலதனமாக்க வக்ப் சட்டத் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இத்திருத்தங்களை முன்மொழியும் மசோதா தாக்கல் செய்யப்படும் போது இண்டியா கூட்டணிக் கட்சிகள் அறிமுக நிலையிலேயே எதிர்த்து இத்திருத்தங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சியின் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன். தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ் குமாரும் இந்தத் திருத்தங்களை எதிர்க்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x