Published : 06 Aug 2024 05:52 AM
Last Updated : 06 Aug 2024 05:52 AM

வீட்டு கட்டிட வரைபட அனுமதிக்கான கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்: அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை: வீட்டு கட்டிட வரைபட அனுமதி கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என தமிழக அரசை அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கைகளின் விவரம் வருமாறு:

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: திமுக அரசின் இந்த நடவடிக்கைகள் காரணமாக பாதிக்கப்படுவது ஏழை எளிய, நடுத்தர மக்கள் தான். இந்தக் கட்டண உயர்வு அனைத்தையும், பொதுமக்கள் மீது சுமத்துவதைத் தவிர கட்டுமான நிறுவனங்களுக்கு வேறு வழி இல்லை. சீரமைப்பு என்று சொல்லிக் கொண்டு மக்கள் மீது கூடுதல் நிதியை சுமத்துவது நியாயமற்ற செயல். முதல்வர் ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு, தற்போது உயர்த்தப்பட்டுள்ள கட்டிட அனுமதிக்கான கட்டணத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை: பொதுமக்கள் எதிர்பார்த்தது, சிக்கலற்ற நடைமுறைகள் மூலம், காலதாமதமின்றி வரைபட அனுமதி வழங்க வேண்டுமே தவிர, இரண்டு மடங்கு அதிகக் கட்டணத்தை அல்ல. உடனடியாக, சுயசான்று அடிப்படையில்வரைபட அனுமதி வழங்குவதற்கான பகல் கொள்ளை கட்டணஉயர்வைத் திரும்பப் பெற வேண்டும். வழக்கமான கட்டணத்தையே சுயசான்று அடிப்படையிலான அனுமதி கட்டணம் வசூலிக்க வேண்டும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: இரக்கமே இல்லாமல் கட்டிட அனுமதிக்கான கட்டணத்தை 112சதவீதம் அளவுக்கு உயர்த்தியிருப்பதன் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வீடுகட்டும் கனவை தொடக்க நிலையிலேயே தமிழக அரசு தகர்த்திருக்கிறது.

தமிழக அரசு மக்களை பாதிக்காதவகையில் அதன் வருவாயை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு பதிலாக ஏழை மற்றும் நடுத்தர மக்களை நேரடியாக பாதிக்கும் வகையில் கட்டண உயர்வுகளை அறிவிக்கக் கூடாது. எனவே, உயர்த்தப்பட்ட வீடு கட்டுவதற்கான கட்டிட வரைபட அனுமதி கட்டணத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: கட்டிட அனுமதி பெறுவதற்கான கட்டணங்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி உயர்த்தியிருப்பது, சொந்த வீடு எனும் கனவை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு திமுக அரசு இழைத்திருக்கும் மாபெரும் துரோகம் ஆகும். எனவே, வீட்டு கட்டிட வரைபட அனுமதிக்கான கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, சுயசான்றுஅடிப்படையில் ஏற்கெனவே இருந்த கட்டண நடைமுறையையே பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x