Published : 06 Aug 2024 05:07 AM
Last Updated : 06 Aug 2024 05:07 AM

திருநெல்வேலி மாநகராட்சி மேயர் தேர்தலில் கட்சி தலைமையை மீறி வாக்களித்த 13 திமுக கவுன்சிலர்கள்

திருநெல்வேலி/கோவை: திருநெல்வேலி மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக தலைமை அறிவித்த அதிகாரபூர்வப் வேட்பாளர் நூலிழையில் வெற்றி பெற்றார். அவருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் 13 பேர் வாக்களித்துள்ள விவகாரம் சர்ச்சையைக் கிளப்பிஉள்ளது.

நெல்லை மேயராக இருந்த பி.எம்.சரவணன் மற்றும் பாளையங்கோட்டை எம்எல்ஏ. அப்துல்வகாப் இடையே நிலவிய பனிப்போர் காரணமாக, திமுக கவுன்சிலர்களே மேயருக்கு எதிராக செயல்பட்டனர். இதையடுத்து, கட்சித் தலைமை அறிவுறுத்தலின்பேரில் சரவணன் ராஜினாமா செய்தார். இதையொட்டி, திமுக கவுன்சிலர் பவுல்ராஜ் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

சமரச முயற்சி தோல்வி: திமுக கோஷ்டி பூசலுக்கு முடிவுகட்டும் வகையில், புதிய மேயரை தேர்வு செய்ய அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் முகாமிட்டு, திமுக கவுன்சிலர்களை அழைத்து சமரசம்பேசினர். மேலும், போட்டியின்றி மேயரைத் தேர்வு செய்ய, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.

ஆனால், கட்சித் தலைமைக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், போட்டி வேட்பாளராக பவுல்ராஜ் மனு தாக்கல் செய்தார். இதனால், கட்சித் தலைமை அதிர்ச்சிக்கு உள்ளானது. தொடர்ந்து, அமைச்சர் தங்கம் தென்னரசு, எம்எல்ஏ அப்துல்வகாப் மூலம், பவுல்ராஜ் வேட்புமனுவை வாபஸ் பெறச் செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனால், அமைச்சரின் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

அதிர்ச்சியில் கட்சி தலைமை: எனினும், திமுக தலைமை அறிவித்த வேட்பாளருக்கே திமுக கவுன்சிலர்கள் அனைவரும் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வாக்கு எண்ணிக்கை முடிவில், கட்சித் தலைமைக்கு கடும் அதிர்ச்சியே ஏற்பட்டது. கட்சி அறிவித்த அதிகாரபூர்வ வேட்பாளர் ராமகிருஷ்ணன் 30 வாக்குகள் பெற்று வெற்றார். அதேநேரத்தில், போட்டி வேட்பாளர் பவுல்ராஜ் திமுக தரப்பில் 13, மற்ற கட்சிகள் சார்பில் 10 என 23 வாக்குகள் பெற்று கடும் நெருக்கடியை அளித்திருந்தார்.

திமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளருக்கு எதிராக வாக்களித்த 13 திமுக கவுன்சிலர்கள் யார் என்பது குறித்து, மாவட்ட பொறுப்புஅமைச்சர் தங்கம் தென்னரசு, திமுக மத்திய மாவட்டப் பொறுப்பாளர் டிபிஎம் மைதீன்கான் மற்றும்அப்துல்வகாப் எம்எல்ஏ ஆகியோரிடம், கட்சித் தலைமை விளக்கம் கேட்டுள்ளது. திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஒருவருக்கு, கட்சி கவுன்சிலர்கள் விசுவாசமாக செயல்படுவது குறித்து பல்வேறு கேள்விகளும் எழுந்துள்ளன.

“திமுக கட்டுப்பாட்டில் கவுன்சிலர்கள் இல்லை என்பது தெளிவாகியுள்ள நிலையில், புதிய மேயர் ராமகிருஷ்ணனுக்கு அவர்கள் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு அளிப்பார்கள்? புதிய மேயருக்கு, அவரது கட்சி கவுன்சிலர்களே முழுமையாக ஒத்துழைப்பு தராதபட்சத்தில் மாநகராட்சி நிர்வாகத்தை சரிவர நடத்த முடியுமா? ” என்று அரசியல் பார்வையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கோவையில் இன்று... கோவை மேயராக இருந்த கல்பனா ஆனந்தகுமார் கடந்தமாதம் ராஜினாமா செய்ததால், புதிய மேயர் தேர்வு செய்யப்படுவார் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

மேயர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஆக. 6-ம் தேதி (இன்று)நடைபெறும் என அறிவிக்கப்பட்டநிலையில், புதிய மேயர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான திமுக கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடந்தது. அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அமைச்சர் முத்துசாமி, திமுக மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொ.அ.ரவி, தளபதி முருகேசன் மற்றும் கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில், மேயர் வேட்பாளராக 29-வது வார்டு திமுக கவுன்சிலர் ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு திமுக கவுன்சிலர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அமைச்சர் கே.என்.நேரு கேட்டுக் கொண்டார்.

ஏமாற்றத்துடன் சென்ற கவுன்சிலர்: கூட்டத்துக்குப் பிறகு அனைவரும் கிளம்பியபோது, மேயர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த மண்டலக் குழுத் தலைவர் மீனா லோகு, ஏமாற்றத்துடன் அழுதபடி காரில் ஏறிச் சென்றார்.

கோவை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில்,96 வார்டுகளில் திமுக மற்றும்கூட்டணிக் கட்சியினரே கவுன்சிலர்களாக உள்ளனர். எனவே, ரங்கநாயகி போட்டியின்றித் தேர்வு செய்யப்படுவது உறுதியாகிஉள்ளது. கோவை கணபதிபுதூரில் வசிக்கும் ரங்கநாயகி, 10-ம்வகுப்பு வரை படித்துள்ளார். இவரதுகணவர் ராமச்சந்திரன், 29-வது வார்டு திமுக செயலாளராகப் பொறுப்பு வகிக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x